“போதைக்கு எதிரான குழு”வினருக்கு (Anti Drugs Clubs)” பயிற்சி முகாமை டிஜிபி சங்கர்ஜிவால் இன்று துவங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த 11.08.2022 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு (DRUG FREE TAMILNADU)” என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, சென்னை பெருநகரில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், Drive Against Drugs (DAD) என்ற பெயரில் போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு போதை பொருட்கள் நடமாட்டம் ஒழிக்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களான வணிக வளாகங்கள், கடற்கரை, பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் இதர இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை பெருநகரக் காவல்துறை சார்பாக நடத்தப்படும் பல்வேறு சமுதாய நல செயல்பாடுகளின் தொடர்ச்சியாக, போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் “போதைக்கு எதிரான குழு” (Anti-Drugs Clubs) என்ற அமைப்பினருக்கு பயிற்சி முகாமினை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை நகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர், அமலாக்கத்துறை ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
பின்னர் போதை பொருட்களுக்கு எதிர்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு காமிக் புத்தகத்தை (Awareness Comic Book) சங்கர்ஜிவால் வெளியிட்டார். தொடர்ந்து, போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டு (Awareness Shortfilm), பின்னர் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை (Anti Drug Pledge) மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியின் முக்கியமாக, போதைக்கு எதிரான குழுவைச் (Anti Drugs Clubs) சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு, காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் பேட்ஜ் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். போதை பொருட்கள் பயன்பாட்டை முறியடிக்கும் நோக்கில் புதுமையான முன்னெடுப்பாக மாணவ, மாணவியர் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கவனத்தை ஈர்க்கும் எண்ணத்தோடு போதைக்கு எதிரான குழுவை (Anti-Drugs Clubs) சென்னை பெருநகர காவல்துறை உருவாக்கியுள்ளது. மாணவர்கள் உள்ளிட்ட இளைய சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கவும், அதனை பயன்படுத்தாமல் தவிர்க்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் தடுக்க வேண்டும் என்பதே இக்குழுவின் நோக்கமாகும்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல், கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா, காவல் இணை ஆணையாளர்கள் அபிஷேக் தீக்க்ஷித், கயல்விழி (தலைமையிடம்), காவல் ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் சுமார் 1,000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.