நீலாங்கரை பகுதியில் வீட்டிலிருந்து தங்கம், வைர நகைகள், பணத்தை திருடிய நேபாள ஆசாமிகள் மூவர் கைது

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவுப்படி சென்னை பெருநகர் முழுவதும் தீவிர குற்ற தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டி திருட்டு வழிப்பறி கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை DACO (Drive Against Crime Offenders) அனைத்து காவல் மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கூடுதல் ஆணையாளர் (தெற்கு) பிரேம்ஆனந்த் சின்ஹா மற்றும் இணை ஆணையாளர் (தெற்கு மண்டலம்) சிபிசக்கரவர்த்தி அறிவுரைகளின் பேரில் அடையாறு துணை ஆணையாளர் பொன்கார்த்திக் குமார் அவர்கள் கண்காணிப்பில் அடையாறு காவல் மாவட்டத்தில் அனைத்து சரக உதவி ஆணையாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைத்து தீவிர குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த 30.01.2024 அன்று நீலாங்கரை காவல் நிலையத்தில் அமித் குமார் அகர்வால் (வயது 50) என்பவர் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘‘தன்னுடைய சகோதரி அம்ரிதா மற்றும் சகோதரியின் கணவர் பிரஜேஷ் குமார் என்பவருக்கு ஆலிவ் பீச், ஈஞ்சம்பாக்கம் என்ற முகவரியில் வீடு உள்ளது. வேலை நிமித்தமாக அவர் ஜெர்மனியில் வசிக்கிறார். கடந்த 30.01.2024 அன்று காலை 8 மணிக்கு என்னுடைய சகோதரியின் வீட்டில் வேலை பார்க்கும் நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டில் திருடு போனதைப் பற்றி தகவல் தெரிவித்தார். உடனே நான் என்னுடைய சகோதரியின் வீட்டிற்குச் சென்று பார்த்தேன். அது தொடர்பாக என்னுடைய சகோதரிக்கு தகவல் தெரிவித்தேன். அதிகவிலை மதிப்பிலான தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பணம் ஆகியவை கொள்ளை போயுள்ளது’’ என தெரிவித்திருந்தார்.

அந்த புகாரின் பேரில் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த திருட்டு வழக்கில் குற்றவாளியை கண்டறியும் பொருட்டு நீலாங்கரை சரக உதவி ஆணையாளர் பாரத் தலைமையில் காவல் ஆய்வாளரைக் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள காலி இடத்தினை ஆய்வு செய்த போது அதில் காணாமல் போன லாக்கர்களில் இரண்டு லாக்கர் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு குற்றவாளிகளைக் கண்டறியும் பொருட்டு பல்வேறு கட்ட விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் நேபாளத்தை சேர்ந்த பிரகாஷ் கட்கா என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்கையில் மேற்படி நபர்தான் இந்த திருட்டு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. மேற்படி பிரகாஷ் விருகம்பாக்கத்தில் தங்கி ஆலிவ் பீச்சில் உள்ள மேற்படி திருடு போன வீட்டில் கடந்த இரண்டு பாதங்களுக்கு முன்பு பகுதி நேர ஓட்டுராக வேலை பார்த்து வந்தும், மேற்படி வீட்டை நோட்டமிட்டு திருட்டிற்கு திட்டம் தீட்டியும் வந்துள்ளார். வீட்டில் உரிமையாளர்கள் வெளிநாடு சென்றதை உறுதி செய்து கொண்ட பின்னர் பிரகாஷ் கட்கா என்பவர் வனோஜ் மாசி மற்றும் ஜனக் பிரசாத் ஜெய்சில், லலித்குமார் கர்மா ஆகியோர்களுக்கு தகவல் தெரிவித்து கூட்டாக கொள்ளையடித்துள்ளனர். மேலும் இவர்கள் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளுடன் டெல்லி சென்று அங்கிருந்து நேபாளம் செல்ல திட்டம் தீட்டினர்.

குற்றவாளிகளை கைது செய்யும் பொருட்டு மும்பை டெல்லி ஜார்கண்ட், லக்னோ புனே மற்றும் பெங்களுரு உட்பட பல்வேறு இடங்களுக்கும் தனித்தனியாக தனிப்படையினர் சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மேற்படி குற்றவாளிகள் பிரகாஷ் கட்கா (30), மனோஜ் மாசி (41), ஜனக் பிரசாத் ஜெய்ஷி (28) ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சொத்துக்களில் 90 சதவீதத்தற்கும் மேல் மீட்கப்பட்டுள்ளது. தலைமறைவு குற்றவாளியை கைது செய்யும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் எதிரிகள் -மனோஜ் மாசி, -ஜனத் பிரசாத் ஜெய்சிலுக்கு பெங்களுரூ மற்றும் தானே நகரங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வருகிறது. மேற்படி வழக்கில் மிக சிறப்பாக செயல்பட்ட அடையார் மாவட்ட தனிப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர். கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப்பின்னர் இன்று (05.02.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
******

Comments (0)
Add Comment