என்கவுன்டரில் பலியான பிரபல ரவுடி விஷ்வாவின் கூட்டாளியை சென்னை நொளம்பூர் போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் உள்ள ஜெஜெ நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாடி குப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி டேனியல் (வயது 29). ஏ கேட்டகிரி ரவுடியான இவர் ஜெஜெ நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 2 கொலை வழக்கு, வழிப்பறி, கஞ்சா கடத்தல், அடிதடி என 10 வழக்குகள் உள்ளன.
2019ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் டேனியல் காஞ்சிபுரத்தில் என்கவுண்டரில் சுடப்பட்ட ரவுடி விஷ்வாவின் வலது கரமாக டேனியல் செயல்பட்டு வந்துள்ளார். திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மகன் எம்பி கதிர் ஆனந்தனின் வெளிநாட்டு சொகுசு காரை தீயிட்டு எரித்த வழக்கில் டேனியல் கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமினில் வெளிவந்து கோர்ட்டில் ஆஜராகாமல் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்தார். அதனையடுத்து அவரை கைது செய்ய ஐகோர்ட் பிடிவாரண்டு பிறப்பித்தது. 7 மாதங்களாக தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் பிடிவாரண்டு பிறப்பித்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இட்ட உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் அஸ்ராகார்க், இணைக்கமிஷனர் மனோகரன் மேற்பார்வையில், திருமங்கலம் உதவிக்கமிஷனர் வரதராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜார்ஜ் மில்லர், சூரியலிங்கம் தலைமையிலான 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. டேனியல் பயன்படுத்தி வந்த செல்போன் டவரை வைத்து அவர் கடலூரில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். போலீசார் அங்கு 4 நாட்கள் முகாமிட்டு விருத்தாச்சலத்தில் வைத்து டேனியலை துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். டேனியல் தான் பயன்படுத்தி வந்த வெளிநாட்டு ஐபோன் ஆப் மூலமாக பேசும் இடத்தை மாற்றி மாற்றி காவல் துறைக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
டேனியலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை கைது செய்த உதவிக்கமிஷனர் வரதராஜன், இன்ஸ்பெக்டர் மில்லர், சூரியலிங்கம் தலைமையிலான போலீஸ் தனிப்படையினரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.