சென்னை, அயனாவரம் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியிடம் தங்கச் செயின் திருடிய நபரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்து 8 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
சென்னை, அயனாவரம், கே.எச்.ரோட்டில் வசித்து வருபவர் அமராவதி (88). நேற்று (09.11.2023) மதியம் 12.30 மணியளவில் வீட்டிற்குள் கட்டிலில் படுத்திருந்தார். அப்போது மாஸ்க் அணிந்து வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்கச்செயினை கழற்றிக்கொண்டு தப்பியுள்ளார். இது குறித்து மூதாட்டி அமராவதி அயனாவரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
K-2 அயனாவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும் சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து, மேற்படி தங்கச்சங்கிலி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அரும்பாக்கத்தைச் சேர்ந்த குற்றவாளி பாபு (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மூதாட்டியிடம் திருடிய 8 சவரன் தங்கச்செயின் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட பாபு இதே போன்று அரும்பாக்கம் பகுதிகளில் 2 மூதாட்டிகளிடம் தங்க நகைகளை திருடிய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
குற்றச் சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 8 சவரன் தங்கச்செயினை மூதாட்டி அமராவதியிடம் கே-2 அயனாவரம் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் நேரில் சென்று காண்பிக்க, மூதாட்டி தன்னுடைய நகை தான் என்று அடையாளம் காண்பித்தார். கைது செய்யப்பட்ட எதிரி பாபு விசாரணைக்குப் பின்னர் இன்று (10.11.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்து களவுச்சொத்தை மீட்ட தனிப்படை காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.