ஊத்தங்கரையில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளியை கைது செய்த தனிப்படைக்கு டிஜிபி பாராட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உட்கோட்டம் சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுத்துக்காரன் கொட்டாய் கிராமம் அருகே கடந்த 05.08.2023 ம் தேதி காலை சுமார் 18 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்கி பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றுள்ளார். அது தொடர்பாக அந்தப் பெண் சாமல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

இதில் கடந்த காலங்களில் இதே போன்று சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சம்பவ இடங்களில் இருந்த CCTV கேமிரவின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் செல்போன் அழைப்புகள், மற்றும் சிசிடிவி சாட்சிகள் மற்றும் தகவலாளிகளை விசாரணை செய்ததிலிருந்தும், இதே குற்ற செயல்முறை கொண்ட சில வழக்குகளின் விவரங்களை அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து போலீசார் சேகரித்தனர்.

அதனையடுத்து போச்சனூர், மடத்தனூர் கிராமம் முருகன் என்ற நபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். பழைய குற்றவாளியான அவர்தான் அந்தப் பெண் மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. அவர் மீது தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் குற்ற வழக்குகள் இருப்பது தெரியவருகிறது. அதனையடுத்து போலீசார் முருகனை கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் திறமையாக புலனாய்வு மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்த ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான தனிப்படையினரை டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் அழைத்து நன்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இது போன்ற சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காவிட்டால் அது குற்றம் செய்வோருக்கு மேலும் துணிச்சலை கொடுப்பதுபோல் ஆகிவிடும். எனவே இது போன்ற சம்பவங்கள் நடக்கும் பட்சத்தில் பொதுமக்கள் முன்வந்து காவல்துறையில் புகார் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

Comments (0)
Add Comment