2021ம் ஆண்டு அடையார் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, W-19 அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேற்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 30 வயது எதிரியை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர். இவ்வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று (08.09.2023) தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி வழக்கில் எதிரி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 30 வயது குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/-அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கனம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த W-19 அடையார் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.