திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்வதாக கூறி ரூ.16 கோடி பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக டிவி சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த பாலாஜி கபா என்பவர் Madhav Media Private Limited என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் ‘‘கடந்த 2020ம் ஆண்டு Libra Productions Pvt Ltd என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ரவீந்தர் என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாகவும், அந்த திட்டத்தின் மதிப்பு ரூ. 200 கோடி என்றும், அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தைகள் கூறினார். அதன்படி திட்டம் ஆரம்பிப்பதற்காக போலியான ஆவணங்களை காண்பித்து தன்னை நம்பவைத்து ரூ. 16 கோடி வரை என்னை முதலீடு செய்ய வைத்தார். ஆனால் அவர் பணத்தை பெற்றுக் கொண்டு Power Project திட்டத்தை ஆரம்பிக்காமலும், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவில் (EDF) வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்யப்பட்டு வந்தது. புலன் விசாரணையில் Libra Libra Productions Pvt Ltd என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ரவீந்தர் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் தொடங்க இருப்பதாக போலியான ஆவணங்களை காண்பித்து அதனை உண்மை என நம்ப வைத்து பாலாஜி கபாவிடம் ரூ. 15,83,20,00 பெற்றுக் கொண்டு Power Project திட்டத்தை ஆரம்பிக்காமலும், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றியது புலன்விசாரணையில் தெரிய வந்தது. அதனையடுத்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்தியக் குற்றப்பிரிவு EDF-I காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் மேனகா ஆகியோர் தலைமையிலான காவல் குழுவினர் மோசடி வழக்கில் தொடர்புடைய ரவீந்தரை (வயது 39) இன்று (07.09.2023) கைது செய்து, கனம் நடுவர் நீதிமன்றம், எழும்பூர் அவர்களிடம் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.
ரவீந்தருக்கு, டிவி சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நடிகை மகாலட்சுமி ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து விவாகரத்த செய்த நிலையில் டிவி சீரியல் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ரவீந்தரை மோசடி வழக்கில் போலீசார் கைது செய்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.