ரூ. 5 கோடி நில மோசடி வழக்கில் நால்வர் கைது

சென்னை, கந்தன்சாவடியைச் சேர்ந்த ஏ.எல். சிதம்பரம் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், கந்தன்சாவடியில் உள்ள 9,600 சதுர அடி நிலத்தை 2001 ஆம் ஆண்டு, மாயமோகன் என்ற நபருக்கு குத்தகைக்கு விட்டேன். மாயமோகனிடம் வேலை பார்த்து வந்த ஹேமலதா, தனது மகன் ராஜசேகர் உடன் சேர்ந்து, அவரது தந்தை சிவசங்கரன் 1966ஆம் ஆண்டு அந்த நிலத்தை வாங்கியதாகக் கூறி, போலியான விற்பனைப் பத்திரத்தை உருவாக்கியுள்ளார்.

பின்னர், இந்த போலியான விற்பனைப் பத்திரத்தைப் பயன்படுத்தி, அந்த நிலத்திற்குப் பட்டா பெற்று, புகார்தாரர் மீது சிவில் வழக்கைத் தொடர்ந்துள்ளார். மேலும், தியாகராஜன் என்பவர், மேற்கண்ட நிலத்தை விற்ற பாலகிருஷ்ண பிள்ளையின் வாரிசுதாரரிடமிருந்து பொது அதிகாரப் பத்திரம் (GPOA) பெற்றுள்ளார். இந்த GPOA-வைப் பயன்படுத்தி, தியாகராஜன், சேகர் என்பவருக்கு ரூ. 5 லட்சத்திற்கு அடமானப் பத்திரம் செய்துள்ளார். ஏ.எல். சிதம்பரத்தின் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரிலும், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் செந்தில்குமாரி மேற்பார்வையிலும், துணை ஆணையர், மத்திய குற்றப்பிரிவு- ஆரோக்கியம் வழிகாட்டுதலின்படியும், நில மோசடி விசாரணை பிரிவு (LFIW) உதவி ஆணையர் அனந்தராமன், LFIW காவல் ஆய்வாளர் திருமதி தனலட்சுமி ஆகியோர் தலைமையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று 03.11.2023, தனிப்பிரிவினர் குற்றவாளிகளான ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், 45, பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஹேமலதா, 55, கல்பாக்கம் சேகர், 55, பள்ளிக்கரணை ராஜசேகர், 31, ஆகிய நால்வரையும் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments (0)
Add Comment