ரஷிய அரசு நிறுவனத்தில் ரூ. 2 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்வதாக ரூ. 7.32 கோடி ஏப்பம் விட்டு தலைமறைவாக இருந்த மோசடி கும்பல் தலைவன் உள்பட 9 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தி.நகரை சேர்ந்த தொழிலதிபர், சென்னை காவல் ஆணையாளரிடம் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் கடந்த ஜுலை மாதம் ஆழ்வார் பேட்டையில் உள்ள Indo -Russian Business Associates என்ற நிறுவனத்தை அருண்ராஜ் மற்றும் பலர் நடத்தி வந்தனர். அருண்ராஜ் தன்னை Indo-Russian Chambers of Commerce and Industries Limited பிரதிநிதி என்றும், ரஷ்ய அரசு இந்திய திட்டங்களுக்காக இந்தியாவில் முதலீடு செய்ய முன் வந்துள்ளதாக தெரிவித்தார். நான் திருச்சியில் நடத்தும் வியாபாரத் திட்டத்திற்கு ரூ. 2000 கோடி வரை முதலீடு பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறினார். அதனை நம்பிய நான் 18.04.2024 முதல் 15.10.2024 வரை அருண்ராஜ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு ரூ.7,32,45,000 வரை செலுத்தினேன். அருண்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டனர். மேலும் இவர்கள் போலியான ரஷ்ய அரசின் லோகோ, கொடிகள் மற்றும் தகவல்களை காண்பித்து ஏமாற்றியுள்ளனர் என அந்த புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகார் தொடர்பாக கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
அதனையடுத்து EDF மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து இவ்வழக்கில் தொடர்படைய எதிரிகள் மதன்குமார், தர்மன் (Retired VAO), ரூபா, விக்னேஸ்வரன், விஸ்வநாதன (தாசில்தார் TASMAC) ஆகியோர்களை 12.11.2024ம் தேதியும், சசிகுமார் என்பவரை 14.11.2024ம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய எதிரியான அருண்ராஜ் என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இதை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க EDF-I, மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் சிவா தலைமையில் காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா அடங்கிய தனிப்படை போலீசார் தலைமறைவு எதிரி அருண்ராஜ் என்பவரை தேடி வந்த நிலையில் 15.11.2024ம் தேதி கர்நாடக மாநிலம், கூர்க், என்ற பகுதியில் தலைமறைவாக இருந்த அருண்ராஜை கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளிகள் தஞ்சாவூரைச் சேர்ந்த குமாரன் (43), சோழவரம் நாகேந்திரன் (39)ஆகியோரையும் கைது செய்தனர்.
சோதணையின் போது தங்க நகைகள் 476 சவரன், வெள்ளி பொருட்கள் 400 கிலோ, பணம் ரூ.14.50 லட்சம், 11 சொகுசு கார் ஆகியவை கைப்பற்றப்பட்டது. எதரிகள் அருண்ராஜ், குமரன் மற்றும் நாகேந்திரன் ஆகிய மூவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.