தூத்துக்குடியில் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவினரால் ரூ. 36 லட்சம் மதிப்புள்ள 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக லாரி மூலம் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தமிழக அமலாக்கம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபி அமல்ராஜ் உத்தரவின் பேரில் ஐஜி செந்தில்குமாரி மேற்பார்வையில் டிஎஸ்பி சுரேஷ், இன்ஸ்பெக்டர் சாவித்திரி தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
நேற்று தூத்துக்குடி வைப்பார் பிரதான சாலையில் வாகனச் சோதனை நடத்தினர். அப்போது S.K.P. சண்முகா பட்டறை அருகே TN 72 CH 0204 என்ற பதிவு எண்ணைக் கொண்ட ஒரு லாரியை மடக்கி சோதனை நடத்தினர். தக்காளி கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் காலி பிளாஸ்டிக் டப்பாக்களுக்கு இடையில் கஞ்சா நிரப்பப்பட்ட 7 கருப்பு மற்றும் காக்கி நிற சணல் சாக்குகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த நாஞ்சில் ராஜா (வயது 31) என்பவர் கைது செய்யப்பட்டார்.
லாரியிலிருந்து 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 36 லட்சம். விசாரணையில், நாஞ்சில் ராஜா மற்றும் அவனது கூட்டாளி முருகனும் ஆந்திராவின் விஜயவாடாவிற்குச் சென்று கஞ்சாவை வாங்கி, கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றதாக தெரிவித்தார். இது தொடர்பாக, தொடர்பாக, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளின் முழு சங்கிலியையும் கண்டுபிடிக்க NIB CID தூத்துக்குடி பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. 240 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிக்குழுவினரை ஏடிஜிபி அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.
போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருள்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை இலவச தொலைபேசி எண் 10581, வாட்ஸ்அப் எண். 9498410581 மற்றும் மின்னஞ்சல் spnibcid@gmail.com மூலம் பகிருமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.