குமரன் நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய நபரை கைது செய்த போலீசார் சுமார் 50 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
சென்னை, அசோக்நகர், 12வது அவென்யூவில் வசித்து வருபவர் சீனிவாசன் (62). இவர் வெளியூர் சென்று விட்டு கடந்த 13.04.2023 அன்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, யாரோ அடையாளம் தெரியாத நபர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த சுமார் 120 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 4,000- ஐ திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து சீனிவாசன் குமரன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. குமரன் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தனர். மேலும் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட திருப்பத்தூரைச் சேர்ந்த ஆரிபிலிப்ஸ் (58) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 50 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஆரிபிலிப்ஸ் மீது ஏற்கனவே 22க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட ஆரிபிலிப்ஸ் நேற்று (14.04.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.