சென்னை நகர காவல்துறையில் காவல் கரங்களுடன் இணைந்து செயல்படும் தன்னார்வலர்களுக்கு மீட்பு பணிக்கான உபகரணங்களை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வழங்கினார்.
சென்னை நகர காவல்துறையில் “காவல் கரங்கள்” உதவி மையம் கடந்த 2021ம் ஆண்டு மனிதம் போற்றுவோம்” மற்றும் “மனித நேயம் காப்போம்” என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்டது. சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட, மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை காவல் கரங்கள் குழுவினர் மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரித்து வருகின்றனர். உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் காவல் கரங்களுடன் இணைந்து செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று 18.06.2024 நடந்தது. இந்தக் கூட்டத்தில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு தேவையான மீட்பு உபகரணங்களை வழங்கினார். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சேவையை பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்தவும், மனஅழுத்தத்தை குறைக்கவும் வேண்டி அவர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான பனியன்கள் வழங்கப்பட்டது.
இதுவரை காவல் கரங்கள் உதவி மையம் மூலம் 6,826 வீடற்ற, ஆதரவற்ற நிலையில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,788 பேர் காப்பகங்களில் தங்க வைத்தும். 1,059 பேர் அவர்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டும், 737 பேர் மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டும், அரசு மருத்துவமனைகளில் 242 நபர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
உரிமை கோரப்படாத 3,674 இறந்த உடல்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் உரிய இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும் காவல் கரங்கள் உதவி மையம் உதவி செய்து வருகிறது. காவல் கரங்கள் உணவு உதவி வாகனம் மூலம் 1,85,907 உணவுகள் நன்கொடையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு, காப்பகங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக தலைமையிட இணைக்கமிஷனர் கயல்விழி, காவல் அதிகாரிகள் என்ஜிஓக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துக்கொண்டனர்.