பயங்கரவாதிகளை கைது செய்த மாநில உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு ஜனாதிபதி விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.
நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரவீந்திரன். இவர் கடந்த 1997ம் ஆண்டு தமிழக காவல்துறையில் நேரடி உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் சென்னை அடையாறு சட்டம் – ஒழுங்கு, பாதுகாப்புப்பிரிவு உள்ளிட்ட பதவிகளில் வகித்தார். படிப்படியாக பதவி உயர் பெற்று ஆய்வாளராக ஆன ரவீந்திரன் தற்போது கடந்த 12 ஆண்டுகளாக நெல்லை மாவட்ட மாநில உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்து முன்னணி, பா.ஜ.க பிரமுகர்கள் கொலை வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை கைது செய்த சிபிசிஐடியின் தனிப்படையில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. போலீஸ் பக்ருதீனை கைது செய்ததற்காக ரவீந்திரன் முதல்வர் ஜெயலலிதாவிடம் கடந்த 2015ம் ஆண்டு ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது ரவீந்திரனின் சிறந்த காவல் பணிக்காக ஜனாதிபதி விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. நேர்மையான, திறமையான அதிகாரி என பெயரெடுத்த ரவீந்திரன் உளவுப் பார்ப்பதில் வல்லவர் என்ற பெருமையையும் உயர் அதிகாரிகள் மத்தியில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.