தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் 2ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் காவல் அருங்காட்சியக அஞ்சல் அட்டை மற்றும் சிறப்பு தபால் உறைகளை வெளியிட்டு, போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.
தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில், தமிழ்நாடு காவல்துறையின் பெருமையை பரைசாற்றும் விதமாக, பழங்காலத்தில் இருந்து காவல்துறை பயன்படுத்திய வாகனங்கள், சீருடைகள், பழங்கால ஆயுதங்களான வாள், ரைபிள், ரிவால்வர் முதல் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஆயுதங்கள், தடய அறிவியல், கைரேகை, வெடிகுண்டு கண்டறிதல், புகைப்படம் எடுத்தல் போன்றவற்றிற்கு பயன்படுத்திய கருவிகள், மன்னர் காலத்தில் இருந்த காவல் அதிகாரியின் உருவம் கொண்ட 250 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால சிலை என பல அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் மிகவும் சிறப்பான கவனஈர்ப்பு, மறுசீரமைக்கப்பட்ட காவல் ஆணையர் அறை ஆகும், இங்கு அப்போதைய ஆணையாளர்கள் முதல் தற்போதைய ஆணையாளர்கள் பயன்படுத்திய பொருட்கள், சாதனங்கள் மற்றும் கலைப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அருங்காட்சியகத்தில் பிரத்யேக ஆடியோ-விஷுவல் தியேட்டர் அமைக்கப்பட்டு, பல்வேறு போட்டிகள் மற்றும் தேசபக்தி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. மேலும், தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் வரலாறு மாணவ, மாணவிகளை எளிதில் அடையும் விதமாக, அரசு பள்ளி மற்றும் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவல் உயர் அதிகாரிகள், வெளிநாட்டவர், பல்வேறு திரைத்துறையினர், தமிழக காவல்துறை, நீதித்துறை, ஆட்சிப்பணி உயர் அதிகாரிகள், காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவர்கள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், காவல் அருங்காட்சியகத்திற்கு வருகை புரிந்து பார்வையிட்டுள்ளனர்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல்துறை டிஜிபிக்கள் ஏகே விஸ்வநாதன் (காவல் வீட்டு வசதி வாரியம்), சீமா அகர்வால் (தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்), தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் கபில்குமார், (தலைமையிடம்), மகேஸ்வரி (மத்தியக் குற்றப்பிரிவு), காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) கயல்விழி துணை ஆணையாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.