சேலம் டிஐஜி சரகத்தில் புத்துயிர் பெற்ற காவல் சிறார் மன்றங்கள்: டிஐஜி ராஜேஷ்வரி அதிரடி நடவடிக்கை

சேலம் காவல் சரகத்துக்குட்பட்ட 4 காவல் மாவட்டங்களில் சிறார் மன்றங்கள் புத்துயிர் பெற்று அதில் 1,373 மாணவர்களை இணைத்து டிஐஜி ராஜேஷ்வரி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

ஐஜி பவானீஸ்வரி, IPS.,

தமிழ்நாட்டில் சிறார்களை நல்வழிப்படுத்தவும், அவர்களை தவறான வழிகளில் செல்லாமல் தடுக்கவும், அவர்களது வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றங்கள் செயல்பட்டுவருகின்றன. சேலம் காவல் சரகத்தில், மேற்கு மண்டல ஐஜி பவானீஸவரி உத்தரவின் பேரில் சேலம் சரக டிஐஜி ராஜேஷ்வரி நேரடி மேற்பார்வையில் காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றங்களை சிறப்பாக செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகின்றன.

டிஐஜி ராஜேஷ்வரி, IPS.,

சேலம் டிஐஜியின் கட்டுப்பாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில் -10 சிறார் மன்றங்கள், நாமக்கல் மாவட்டத்தில் -11 சிறார் மன்றங்கள், தர்மபுரி மாவட்டத்தில் -10 மற்றும் கிருஷ்ணகிரியில் -10 மன்றங்கள் என மொத்தம் 41 காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றங்களில் 1,373 மாணவ மாணவியர் (890- சிறுவர் & 483 சிறுமியர்) உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர்.

அது தொடர்பாக டிஐஜி ராஜேஷ்வரி தெரிவித்துள்ளதாவது:–

‘‘சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றங்களில் நடத்தப்படும் பல்வேறு செயல்பாடுகளால் மாணவ மாணவிகள் பயனடைந்துள்ளனர். கோவிட் பாதிப்பிற்குப் பிறகு காவல் சிறார் மன்றங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. கட்டிடங்கள் பராமரிக்கப்படாமல் இருந்தன. ஜனவரி -2023ம் ஆண்டில் அனைத்து 41 சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றங்களும் புதுப்பிக்கப்பட்டு, உறுப்பினர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டனர். மேலும் சிறார்களுக்கு கண் பரிசோதனை, தோல் பரிசோதனை, ஆடை அலங்கார போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட கலாச்சார போட்டிகள், குழந்தைகள் தினம் மற்றும் ஆசிரியர் தின கொண்டாட்டங்கள், பொங்கல், தீபாவளி மற்றும் விஜயதசமி உள்ளடக்கிய திருவிழாக்கள் சிறார் மன்ற வளாகத்தில் கொண்டாடப்பட்டபோது குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டன. அவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசுதல் மற்றும் எழுத்து பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும், அவர்கள் கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை மேம்படுத்துவதற்காக சப் இன்ஸ்பெக்டர்களை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து சிறார் மன்றத்தின் நன்கொடையாளர்களை அணுகியதில் அவர்கள் சிறார் மன்றங்களின் செயல்பாட்டை மேம்படுத்த நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்கினர். 16.12.2023 அன்று கிருஷ்ணகிரியில் உள்ள வேப்பனப்பள்ளி மற்றும் மத்திகிரி ஆகிய இரண்டு காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றங்கள் TMT இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆர்.கே.பௌல்ட்ரி ஆகிய நிறுவனங்களால் தத்தெடுக்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டது. ஒவ்வொரு சிறார் மன்ற பராமரிப்பிற்கும் ஆண்டுக்கு ரூ. 1.92 லட்சம் நிதியுதவியை இந்த நிறுவனங்கள் வழங்குகின்றன. புதுப்பிக்கப்பட்ட சிறார் மன்றங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயல்பாடுகளின் சில படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ராஜேஷ்வரி தெரிவித்தார்.

 

Comments (0)
Add Comment