தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை, சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்விற்கென கல்வி திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, தொழிற்கூட பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
இந்த வகையில் சிறை வளாகங்களில் சிறை அங்காடிகள் தொடங்கிட அரசால் அனுமதி வழங்கப்பட்டு அதில் சிறைவாசிகளால் தயார் செய்யப்படும் பாலி விஸ்கோஸ் துணி (காக்கி மற்றும் வெள்ளை) ஆயத்த ஆடைகள், கைவினைப் பொருட்கள், நோட்புக், பூச்செடிகள், மண்புழு உரம், காய்கறிகள், ஓவியங்கள், மழை கோட், செக்கு எண்ணைய் வகைகள், அடுமனைப் பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ( R.O.Water) போர்வைகள், துண்டுகள், தலையனை உறைகள், கால் மிதியடிகள், சணல் பைகள், மர வேலைப்பாடுகளுடன் கூடிய கைவினைப்பொருட்கள் மற்றும் மேஜை, நாற்காலி வகைகள், இரும்பு மேஜை மற்றும் நாற்காலி வகைகள் போன்றவைகள் சிறைவாசிகள் மூலம் தயார் செய்யப்பட்டு சிறை சந்தை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இச்செயல்பாடுகள் மூலம் சிறைவாசிகள் தினசரி ஊதியம் மற்றும் லாபத்தில் ஒரு பங்குத் தொகையும் பெற்று வருகின்றார்கள்.
சிறை அங்காடிகளின் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் விதமாக கோவை, புழல், வேலுார், பாளையங்கோட்டை, பார்ஸ்டல் பள்ளி புதுக்கோட்டை ஆகிய 5 ஆகிய மத்திய சிறைவளாகங்களில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் தமிழ்நாடு சிறைத்துறையால் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து நடத்த அரசால் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இந்த பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் ப்ரிடம் பில்லிங் ஸ்டேசன் ( Freedom Filling Station) என்ற பெயரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. 31.03.2023 வரை அனைத்து பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களின் மூலமாக ரூ. 847.31 கோடி மொத்த விற்பனை செய்யப்பட்டு, லாபம் 23.94 கோடி பெறப்பட்டு, சிறைவாசிகளின் ஊதியமாக 2.37 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அரசாணை நிலை எண்.213 (உள்.சிறை.3) நாள் 02.05.2022 ன்படி கோவை, புழல், திருச்சி I, திருச்சி II, சேலம் மற்றும் மதுரை ஆகிய மத்திய சிறைகளில் 6 பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் நிறுவிட ஆணைவழங்கப்பட்டது.
இவற்றில் மதுரை புது ஜெயில் சாலையில் புதிதாக கட்டப்பட்ட ப்ரிடம் பெட்ரோல் நிலையத்தை இன்று 18.08.2023 தமிழக சட்டம், நீதி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி திறந்து வைத்தார். இத்திறப்பு விழாவில் வணிகம் மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி, மதுரை சரக சிறைத்துறை துணைத்தலைவர் பழனி, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் பொறுப்பு அ. பரசுராமன் மற்றும் ஐ.ஒ.சி.எல். நிறுவன தலைமை நிர்வாக இயக்குநர் வி.சி.அசோகன் மற்றும் உயர் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் 36 சிறைவாசிகள் பணிபுரிய உள்ளனர். இவர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ. 300 வழங்கப்படும். தமிழக சிறைத்துறை மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த பெட்ரோல் நிலையம் தமிழத்தில் 8 வது பெட்ரோல் நிலையமாகும். விரைவில் தமிழகத்தில் உள்ள மற்ற சிறை வளாகங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். தமிழ்நாடு சிறைத்துறையால் நிர்வகிக்கப்படும் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் பொதுமக்களிடையே மிக சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாடு சிறைத்துறையால் நடத்தப்படும் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் / டீசலின் தரம் மற்றும் கண்ணியமான சேவைகளால் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.