சென்னை மக்களே உஷார் கம்மி விலையில் புது செல்போன் வாங்கித்தருவதாக மோசடி செய்யும் கும்பல்

சென்னை ராயப்பேட்டை பகுதியில் குறைந்த விலையில் புதிய செல்போன் தருவதாக கூறி செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற 2 வடமாநில நபர்களை போலீசார் கைது செய்து 8 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை, ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலையைச் சேர்ந்த பிரசாந்த், 18 என்பவர் ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 31.07.2023 அன்று இரவு, அண்ணாசாலை, சர்ச் பார்க் பள்ளி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் பிரசாந்திடம், தங்களிடம் புதிய செல்போன் இருப்பதாகவும் செல்போன் பெட்டியை காண்பித்து, அவசரமாக பணம் தேவைப்படுவதால், 60,000- மதிப்புள்ள இந்த புதிய செல்போனை ரூ. 30,000-க்கு தர உள்ளதாக தெரிவித்தனர். அவர்கள் பேச்சில் மயங்கிய பிரசாந்த் அவர்கள் காட்டிய செல்போனை வாங்க முடிவு செய்து ரூ. 30,000- பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். 2 நபர்களும் பிரசாந்த் வைத்திருந்த பணம் ரூ. 30,000- மற்றும் பிரசாந்தின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து, பிரசாந்த் கொடுத்த புகாரின்பேரில், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ராயப்பேட்டை காவல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, எதிரிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து குற்றவாளிகளை துப்பு துலக்கினர். அதனையடுத்து உபி, மீரட்டைச் சேர்ந்த கலீத் அன்பி, 28, முகமது நதீம், 35 உத்திரபிரதேசம் ஆகிய இருவரை கைது செய்தனர்.

விசாரணையில் எதிரிகள் இருவரும் செல்போன் வடிவத்தில் கற்களை தயார் செய்து, புதிய செல்போன் அட்டை பெட்டியில் வைத்து புதிய செல்போனை குறைந்து விலைக்கு தருவதாகக் கூறி பல நபர்களிடம் போலி பில் ரசீது மற்றும் போலி செல்போனை கொடுத்து பணம் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இவர்கள் எழும்பூர், நுங்கம்பாக்கம் பகுதிகளிலும் கைவரிசை காட்டியதும், அந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்துள்ளதும் தெரியவந்தது.

அதன்பேரில், எதிரிகளிடமிருந்து புகார்தாரரின் செல்போன் உட்பட 8 செல்போன்கள், 5 போலி செல்போன்கள், பணம் ரூ.8,670/- மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (01.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இது போன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment