தமிழகத்தில் காவல்துறையின் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொலைகள் குறைந்து, தண்டனைகள் அதிகரித்துள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
தமிழ்நாட்டில் காவல்துறை மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால், 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் கொலை, காயம் மற்றும் கலவரங்கள் உள்ளிட்ட குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன. கொலைகளின் நீண்டகால போக்கின் பகுப்பாய்வின் படி 2017- – 2020 ஆம் ஆண்டில், கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து, 2019 ஆம் ஆண்டில் 1,745 வழக்குகளுடன் உச்சத்தை எட்டின. இருப்பினும், 2021 மற்றும் அதற்குப் பிறகு, கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து குறைந்து வருகின்றன. 2024 ஆம் ஆண்டில் மிகக்குறைவாக 1,563 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் எந்தவொரு ஆண்டையும் விட 2024 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக 161 கொலை வழக்குகள் பதிவாகியிருந்தாலும், இது 2024 ஆம் ஆண்டில் மாத சராசரியுடன் ஒப்பிடும் போது கொலை வழக்குகள் 130 ஆகக் குறைந்துள்ளன. இது மேலும் 2025 ஆம் ஆண்டில் ஏப்ரல் வரை 120 கொலை வழக்குகளாகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டுகளை காட்டிலும் 2024 ஆம் ஆண்டில், ரவுடிகளுக்குள் ஏற்படும் முன்விரோதக் கொலைகள் குறைந்துள்ளன. 2021 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் பழிக்குப்பழி, ரவுடி கொலைகள் 35 ஆக இருந்தது. அதுவே 2022 ஆம் ஆண்டில் 29 ஆகவும், பின்னர் 2023 ஆம் ஆண்டில் 25 மற்றும் 2024 ஆம் ஆண்டில் 22 ஆகவும் குறைந்து, 2025 ஆம் ஆண்டில் (ஏப்ரல் வரை) பழிக்குப்பழி, ரவுடி கொலைகள் 18 கொலைகளாகக் குறைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) கொலை வழக்குகள் குறைந்து வரும் போக்கின் தொடர்ச்சியாக, முந்தைய ஆண்டின் (2024) முதல் நான்கு நான்கு மாதங்களில் 501 கொலைகளுடன் ஒப்பிடும்போது, 483 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.
* ரவுடிகளுக்கு எதிரான அதிகபட்ச தண்டனைகள்:
நீதிமன்ற விசாரணை முடியும் தருவாயில் உள்ள வழக்குகளில் தண்டனை கிடைக்கும் வாய்ப்புள்ள வழக்குகள் அடையாளம் காணப்பட்டு அவை துரிதப்பட்டுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு 188 வழக்குகள் அடையாளம் காணப்பட்டு 2024 ஆம் ஆண்டில் 242 சரித்திரப் பதிவேட்டு ரவுடிகள் தண்டிக்கப்பட்டு, 150 ரவுடிகளுக்கு 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட தண்டனை பெறப்பட்டுள்ளது, இது கடந்த 12 ஆண்டுகளில் மிக அதிகமாகும். இந்த ஆண்டு மேலும் இதுபோன்று 376 வழக்குகள் நெருக்கமாக மேற்பார்வையிடப்பட்டு வருகின்றன. ஏப்ரல், 2025 வரை சரித்திரப் பதிவேடு ரவுடிகள் சம்பந்தப்பட்ட 52 குறிப்பிடத்தக்க வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன. மேலும் நடப்பு ஆண்டில் 1,325 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.