சென்னையில், நடிகை கவுதமிக்கு சொந்தமான சொத்தை அதிக விலைக்கு விற்று மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, ஈ.சி.ஆர் ரோட்டில் வசித்து வரும் பிரபல நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், தனக்கு சொந்தமான திருவள்ளுவர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்தில் இருந்த சுமார் 8.63 ஏக்கர் நிலத்தினை விற்று தருவதாக கூறி சென்னை அண்ணா நகரை சேர்ந்த பலராமன் மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த ரகுநாதன் ஆகிய இருவரும் பொது அதிகார பெற்றுக்கொண்டனர். பின்னர் அந்த இடத்தினையும் அதன் அருகில் உள்ள மற்ற இடங்களையும் சேர்த்து மும்பையைச் சேர்ந்த Jaya Hind Investments (P) Ltd., என்ற நிறுவனத்திற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விற்பனை செய்துள்ளனர். அதில் தனக்கு ரூ. 4.10 கோடி மட்டும் விற்பனை தொகையாக கொடுத்ததாகவும் அதன் பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்த பிறகு தான் தனக்கு சொந்தமான இடத்தினை ரூ. 11 கோடிக்கு விற்பனை செய்து விட்டு தனக்கு வெறும் ரூ. 4.10 கோடி மட்டும் கொடுத்து ஏமாற்றிய விவரம் தெரியவந்தது.
எனவே தன்னை ஏமாற்றிய பலராமன், ரகுநாதன் மற்றும் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆவணங்கள் மோசடி பிரிவில் (EDF-I) வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி ஆலோசனையின் பேரில், ஆவணங்கள் மோசடி பிரிவில் (EDF-I) காவல் உதவி ஆணையாளர்களின் தலைமையிலான காவல் ஆய்வாளர் ஆபிரகாம் குரூஸ் மற்றும் காவல் குழுவினர் விசாரணை நடத்தினர். அதனையடுத்து இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னை, அண்ணாநகர் மேற்கைச் சேர்ந்த பலராமன் (64) என்பவரை இன்று (03.11.2023) கைது செய்து கனம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.