ஸ்பா பெயரில் விபசார தொழில் நடத்திய நபர் கைது: 2 அழகிகள் மீட்பு

சென்னை, பெரம்பூர் பகுதியில் ஸ்பா சென்டர் பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய நபரை விபசாரத்தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து 2 அழகிகளை மீட்டனர்.

சென்னை நகரில் விபசாரத் தடுப்புப்பிரிவு போலீசார் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் தீவிரமாக கண்காணித்து விபச்சார புரோக்கர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் ஒரு வணிக வளாகத்தில் ஸ்பா என்ற பெயரில் விபசாரத் தொழில் நடப்பதாக தகவல் வந்தது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி ஆலோசனையின் பேரில் துணைக்கமிஷனர் வனிதா மேற்பார்வையில் விபசாரத் தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit, ITPU-2), காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் 3வது மாடியிலுள்ள ஸ்பா சென்டரை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி இடத்தில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் (27) என்ற நபரைக் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 2 அழகிகள் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மேற்படி எதிரி பாலசுப்ரமணியம் விசாரணைக்குப் பின்னர் நேற்று (24.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

 

Comments (0)
Add Comment