நாமக்கல், மாவட்டம், மோகனூரைச் சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் (34). இவர் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதியன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘எனக்கும் என்னுடன் சேர்த்து பல நபர்களுக்கு அரசு துறைகளில் OA, Record clerk வேலை வாங்கி தருவதாகக் கூறிய சென்னை கோடம்பாக்கம், ரங்கராஜபுரத்தைச் சேர்ந்த கந்தசாமி (51) என்பவரிடம் மொத்தம் ரு.42,49,000- கொடுத்தோம். ஆனால் கந்தசாமி பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” கூறியிருந்தார்.
அந்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு காவல் குழுவினர் தலைமறைவாக இருந்த கந்தசாமியை நேற்று கைது செய்தனர். விசாரணைக்குப் பின் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.