ரூ. 3.65 கோடி பணம் மோசடி செய்த நபர் கைது

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அசோசியேட்ஸ் என்ற பெயரில் அரிசி மற்றும் முந்திரி ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருபவர் அகிலாண்டேஸ்வரி (37). முரளிதரன் என்பவர் தான் வாங்கிய கடனை அடைப்பதற்காக அகிலாண்டேஸ்வரியிடம் ரூ. 70 லட்சம் அடமானக் கடனாக பெற்றுள்ளார். அதற்கு ஈடாக தனக்கு சொந்தமான செய்யூரில் உள்ள சொத்தை புகார்தாரரிடம் அடமானம் வைத்துள்ளார். மேலும் தனது நண்பர்களான மற்ற எதிரிகளையும் புகார்தாரருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதை நம்பி அகிலாண்டேஸ்வரியும் அடமானக் கடனாக ரூ. 2,95,00,000-யை கொடுத்துள்ளார். அந்த பணத்திற்கு ஈடாக ரூ. 3 கோடி மதிப்பிலான சொத்தினை புகார்தாரருக்கு விற்பதற்காக பொது அதிகாரம் பதிவு செய்து கொடுத்துள்ளனர். ஆனால் அகிலாண்டேஸ்வரிக்கு தெரியாமல் தாங்கள் அளித்த அளித்த பொது அதிகாரத்தை ரத்து செய்துள்ளனர். இதன் மூலம் முரளிதரனும் அவரது நண்பர்களும் புகார்தாரரை ஏமாற்றி அவரிடமிருந்து ரூ.3.65 கோடியை மோசடியாக பெற்றுக் கொண்டுள்ளனர். தன்னை ஏமாற்றிய எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு, ஆவண மோசடி பிரிவு-II-ல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் சம்மந்தப்பட்டு தலைமறைவாக இருந்து வந்த எதிரிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்தியகுற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் செந்தில்குமாரி அறிவுரையின் பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்-2 திருமதி நிஷா நேரடி மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுமதி தலைமையிலான காவல் குழுவினர் சென்னை ஆர்ஏ புரத்தைச் சேர்ந்த முரளிதரன் (66) என்பவரை நேற்று (06.11.2023) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முரளிதரன் நேற்று (06.11.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Comments (0)
Add Comment