மடிக்கணிணிகளை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த நபர் கைது: 312 மடிக்கணிணிகள் பறிமுதல்

சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் மடிக்கணினிகளை வாடகைக்கு எடுத்து மற்ற நிறுவனங்களில் விற்பனை செய்து மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். 312 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, விருகம்பாக்கம், காளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் பிரேமலதா (43). அவரது வீட்டின் ஒரு பகுதியில் ‘’Technical Systems Private limited’’ என்ற பெயரில் மடிக்கணினிகளை பல்வேறு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ‘’Dinesh Communications’’ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் தினேஷ்லிங்கம் என்பவர் பிரேமலதா நிறுவனத்தில் 496 மடிக்கணினிகளை வாடகைக்கு எடுத்துச் சென்று சுமார் ரூ. 21 லட்சம் வாடகை பணம் தர வேண்டியிருந்துள்ளது. இந்நிலையில், மடிக்கணினிகளை திரும்ப தராமலும், தினேஷ்லிங்கம் மடிக்கணினிகளை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக பிரேமலதா தினேஷ்லிங்கம் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் தினேஷ்லிங்கம், பிரேமலதாவின் 496 மடிக்கணினிகளை வாடகைக்கு எடுத்துச் சென்று, 57 மடிக்கணினிகளை மட்டும் திரும்ப ஒப்படைத்த நிலையில், மீதமுள்ள மடிக்கணினிகளுக்கு வாடகை பணமும் தராமலும், அவற்றை மற்ற நிறுவனங்களில் விற்பனை செய்தும் மோசடி

செய்துள்ளது தெரியவந்தது. அதனையடுத்து காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி மோசடியில் ஈடுபட்ட பம்மலைச் சேர்ந்த தினேஷ்லிங்கம் (27) என்பவரை இன்று (18.11.2023) கைது செய்தனர். அவரிடமிருந்து 312 மடிக்கணினிகள். 1 கார் மற்றும் 1 புல்லட் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி தினேஷ்லிங்கம் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட உள்ளார்.

Comments (0)
Add Comment