தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பணம் ரூ. 76 லட்சம் மற்றும் காணாமல் போன ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 95 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு போலீசாருக்கு எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
சைபர்கிரைம் ஏடிஎஸ்பி உன்னிக்கிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுதாகர், அச்சுதன், அபிராமி மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்தனர். அதன் விளைவாக தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல் நிலைய பல்வேறு வழக்குகளில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி துரித நடவடிக்கையில் இறங்கினர். அதன் விளைவாக நீதிமன்றம் மூலமாக 27 வழக்குகளில் மொத்தம் ரூபாய் 76,25,577- பணத்தை காவல்துறையினர் முடக்கம் செய்தனர். அதனையடுத்து அந்த பணம் மீட்கப்பட்டு வழக்கில் பாதிக்கப்பட்ட 27 நபர்களிடம் எஸ்பி பாலாஜி சரவணன் இன்று ஒப்படைத்தார்.
மேலும் சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டுபிடித்தனர். அது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்யப்பட்டன. அதன் உரிமையாளர்களிடம் ஏற்கனவே கடந்த 15.10.2020 அன்று 102 செல்போன்களும், 09.12.2020 அன்று 60 செல்போன்களும், 12.02.2021 அன்று 61 செல்போன்களும், 02.07.2021 அன்று 60 செல்போன்களும் 24.08.2021 அன்று 70 மற்றும் 08.12.2021 அன்று 100 செல்போன்களும், 22.03.2022 அன்று 100 செல்போன்களும், 22.08.2022 அன்று 127 செல்போன்களும், 02.02.2023 அன்று 95 செல்போன்களும், 18.01.2024 அன்று 100 செல்போன்களும் என மொத்தம் 875 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது சைபர் கிரைம் குற்ற பிரிவு தனிப்படையினர் இதனை கண்காணித்து துரிதமாக செயல்பட்டு ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 95 செல்போன்களை கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர். அவை இன்று (18.07.2024) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஒப்படைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ 1 கோடியே 06 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 970 காணாமல் போன செல்போன்களை தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தின் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணத்தையும் மீட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசாரை எஸ்பி பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது சைபர் குற்றப் பிரிவு ஏடிஎஸ்பி உன்னிக்கிருஷ்ணன், தூத்துக்குடி தலைமையிடத்து ஏடிஎஸ்பி ஆறுமுகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி எடிசன், உதவி ஆய்வாளர்கள் அச்சுதன், அபிராமி உட்பட சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.