சென்னை நகரில் பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்வோம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பேட்டி

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி குறித்து அறிந்து நாங்களும் பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்வோம் என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி குறித்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது போன்ற நிகழ்ச்சியில் சென்னை நகருக்குள் விடுமுறை நாட்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சென்னை நகருக்குள் நடக்கும் பெரிய நிகழ்ச்சிகளில் என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் கையாளப்படுகிறது? என்பது குறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரிடம் செய்தியாளர்கள் கேள்வியை முன் வைத்தனர்.

அப்போது அவர் கூறுகையில், “ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி குறித்து உரிய விசாரணை நடத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதன்படி தாம்பரம் காவல் ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார். சென்னை காவல்துறையை பொறுத்தமட்டில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தால் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. அதனை காவல்துறையினரும் கண்காணித்து வருகின்றனர்.

பனையூரில் நடந்த குளறுபடி குறித்து விசாரித்து தாம்பரம் காவல்துறை ஆணையரகம் அறிக்கை சமர்ப்பிக்கும். அதனை நாங்களும் கேட்டு தெரிந்து கொண்டு இது போன்ற நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு நடைமுறைகளில் வேறு என்னென்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வோம். அதனை ஆலோசித்து நடைமுறை படுத்துவோம்” என்று கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

 

Comments (0)
Add Comment