சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கோயம்பேடு துணை ஆணையாளர் மற்றும் காவல் குழுவினர் புகார் மனு கொடுத்த மூத்த குடிமகன் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை, சாலிகிராமம், எஸ்.பி.ஐ. காலனி 2வது தெருவில் வசித்து வரும் மூத்த குடிமகன் N.K. ரத்தினசபாபதி, (வயது 81) என்பவர் கடந்த 01.11.2023 அன்று காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோரை நேரில் சந்தித்து, தனது வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர் வாடகை தராமலும் வீட்டை காலி செய்யாமலும் ஏமாற்றி வருவதாகவும், நடவடிக்கை எடுக்கும்படியும் புகார் மனு கொடுத்தார். இந்த மனு மீது விரைந்து விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும், மூத்தகுடிமகன் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளவும், கோயம்பேடு காவல் துணை ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், கோயம்பேடு, துணை ஆணையாளர் உமையாள் விருகம்பாக்கம் சரக காவல் உதவி ஆணையாளர் சுப்ரமணி, காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களுடன் நேற்று (02.11.2023) சாலிகிராமத்தில் உள்ள மூத்தகுடிமகன் ரத்தினசபாபதியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். ரத்தினசபாபதி, தனது சொந்த வீட்டில் அவரது மனைவி பானுமதி (71) என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவர்களது மகன் அமெரிக்காவில் உள்ளார். ரத்தினசபாபதி கடந்த 2019ம் ஆண்டு, சுமார் 55 வயதுடைய அருள்தாஸ் என்பவருக்கு அவரது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார். ஆனால் அருள்தாஸ் 4 வருடங்களாக சரிவர வாடகை தராமல் ஏமாற்றி வந்த நிலையில், கடந்த 8 மாதங்களாக மேற்படி வாடகை வீட்டை பூட்டிச் சென்று வாடகையும் தராமல், வீட்டை காலியும் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளதும் தெரியவந்தது.
உடனே, காவல் துணை ஆணையாளர் உமையாள் அவர்கள் எதிரிமனுதாரர் அருளுதாஸை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அருள்தாஸ் தான் வெளியூரில் இருப்பதாகவும், விரைவில் விசாரணைக்கு வருவதாகவும் தெரிவித்தார். பின்னர் காவல் துணை ஆணையாளர் அவர்கள், ரத்தினசபாபதியிடம் உங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ள எதிர்மனுதாரர் அருள்தாஸிடம் விசாரணை செய்து, சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும், அவசர உதவி தேவையெனில் எப்பொழுதும் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்து, காவல் அதிகாரிகள் மற்றும் உதவி மைய எண்கள் கொடுக்கப்பட்டது.
தனது வயது முதிர்வை கருத்தில் கொண்டு, தான் கொடுத்த புகார் மனுவின் மீது, துணை ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகளை துனது வீட்டிற்கு அனுப்பி விசாரணை செய்ததற்காக காவல் ஆணையாளர் அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி தெரிவித்து, 4 வருடங்களாக மன உளைச்சலில் இருந்த தனக்கு காவல் துணை ஆணையாளரின் அணுகுமுறையும், உரிச சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததும் மிகவும் ஆறுதலாக உள்ளதாக, மூத்தகுடிமகன் ரத்தினசபாபதி அவர்கள், மனம் நெகிழ்ந்து காவல் அதிகாரிகளிடம் நன்றி தெரிவித்தார்