சென்னை, மடிப்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய கொள்ளையனை 6 மாதங்களுக்குப் பிறகு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
·
சென்னை பெருநகர காவல், மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் (வயது 32). கடந்த 14.2.2023 அன்று வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊர் சென்றிருந்தார். அப்போது இரவு அடையாளம் தெரியாத நபர் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த தங்க நகைகள் 60 சவரன் மற்றும் பணத்தை திருடி சென்று விட்டார். அது தொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வந்தனர். கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா அறிவுரையின் படி, இணைக்கமிஷனர் சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில், பரங்கிமலை துணைக்கமிஷனர் தீபக் சிவாச் தலைமையில் மடிப்பாக்கம் உதவிக்கமிஷனர் பிராங் டி ரூபன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.
”
தனிப்படையினர் சம்பவ இடத்தில் இருந்து CCTV பதிவேடுகளை ஆய்வு செய்தும் பழைய வீடு புகுந்து திருடும் கன்னக்களவு குற்றவாளிகளை பற்றி விசாரணை நடத்தினர். அதனையடுத்து பன்னீர் செல்வம் வீட்டில் கொள்ளையடித்த சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த சதீஷ் (எ) கிளி சதீஷ் (வயது 27) என்பவரை கைது செய்தனர். கடந்த நான்கு மாத காலமாக தனிப்படை போலீசார் மதுராந்தகம், திருப்போரூர், ஆவடி, திருவள்ளுவர், சோழவரம் பகுதியில் தேடி வந்த நிலையில் இன்று (07.08.2023) தனிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி மடிப்பாக்கத்தில் வைத்து சதீஷ் (எ) கிளி சதீஷை கைது செய்தனர்.