புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்ததால் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே மற்றும் மீமிசல் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
மீமிசல் இன்ஸ்பெக்டர் ப்ரியா
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 704 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த போலீசார் அனுமதி அளித்திருந்தனர். அதன்படி காவல்துறை அனுமதித்த இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து, பிரதிஷ்டை மற்றும் அலங்காரம் செய்து நேற்று 25.09.2023 காலை முதல் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். சிலைகள் வைக்கப்பட்டிருந்த இடங்களில் திருச்சி டிஐஜி பகலவன், புதுக்கோட்டை எஸ்பி வந்திதாபாண்டே உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணிக்கு குவிக்கப்பட்டிருந்தனர். பதட்டம் நிறைந்த மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீசார் உளவுப்பிரிவு மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பதட்டம் நிறைந்த இடத்தில் ஒன்றான கோட்டைப்பட்டினம் சப்டிவிஷன் மீமிசல் கடற்கரை கிராமத்தில் சமீபத்தில் இரண்டு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டது. மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது அந்த பிரச்சினையால் வன்முறை ஏற்படும் என, அதனால் உஷாராக இருத்தல் அவசியம் என மீமிசல் இன்ஸ்பெக்டர் ப்ரியாவுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
கோட்டைப்பட்டிணம் டிஎஸ்பி கவுதம், ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி தலைமையில் மீமிசல் இன்ஸ்பெக்டர் ப்ரியா மேற்பார்வையில் அங்கு ஏராளமான ஊர்க்காவல் படையினர், ஆயுதப்படையினர் மற்றும் கலவரத்தை கட்டுப்படுத்தும் வஜ்ரா வாகனங்கள் வரவழைக்கப்பட்டிருந்தன.
போலீசார் 23.09.2023 முதல் அங்கு தீவிர பாதுகாப்புப்பணியில் 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்பட்டனர். அதனையடுத்து நேற்று இன்ஸ்பெக்டர் ப்ரியா தலைமையிலான போலீசார் மீமிசலில் விழிப்புடன் செயல்பட்டு விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் திறம்பட செயல்பட்டனர். அதனையடுத்து 24.09.2023 காலை தொடங்கிய சிலை கரைப்பு நிகழ்ச்சி இரவு வரை நீடித்து அமைதியாக நடந்து முடிந்தது. மீமிசல் பகுதியில் விநாயகர் ஊர்வலத்தின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் என்பதை முன்கூட்டியே கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்ட புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி வந்திதாபாண்டே, டிஎஸ்பிக்கள் கவுதமன், தீபக் ரஜினி மற்றும் மீமிசல் இன்ஸ்பெக்டர் ப்ரியா ஆகியோரின் டீம் ஒர்க்கை புதுக்கோட்டை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
செய்தி தொகுப்பு – மு. ராஜாமுகமது, மீமிசல், 97874 50007.