பிளாட்டில் விபசாரம் 2 புரோக்கர்கள் கைது: 3 அழகிகள் மீட்பு

சென்னை, வடபழனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்திய 2 புரோக்கர்களை போலீசார் கைது செய்து அழகிகளை மீட்டனர்.

சென்னையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி, பணம் சம்பாதிக்கும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்ப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் மகேஸ்வரி அறிவுரையின்பேரில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையாளர் வனிதா மேற்பார்வையில், விபச்சார தடுப்புப் பிரிவு உதவி ஆணையாளர் ராஜலட்சுமி தலைமையில், விபச்சார தடுப்புப்பிரிவு (ITPU) காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் விபச்சார தரகர்களை கைது செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, விபச்சார தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit, ITPU-2 காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் 26.07.2023  காலை, வடபழனி, வடக்கு மாடவீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி இடத்தில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பஷீர் அகமது இப்ராஹிம் (60) நாகப்பட்டினம் முகமது அலி (27) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (26.07.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 3 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

 

Comments (0)
Add Comment