சென்னை, மேற்கு ஜாபர்கான்பேட்டை, அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பார்வதி முத்து, (39). இவரது அக்கா கணவர் பிச்சாண்டி என்பவரின் மகனை அதே பகுதியைச் சேர்ந்த நபர்கள் நேற்று (25.09.2023) இரவு விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்கியுள்ளனர். உடனே பார்வதி முத்து மற்றும் பிச்சாண்டி ஆகிய இருவரும் சம்பவயிடத்திற்கு சென்று இது குறித்து கேட்டுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த 5 நபர்கள் பார்வதி முத்து மற்றும் அவரது உறவினர் பிச்சாண்டி ஆகியோரை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். காயமடைந்த பார்வதி முத்து அவரது உறவினர் பிச்சாண்டி ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மேற்கு ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த கேசவன் (எ) கேடி கேசவன் (23), ராஜா (30), தண்டபாணி (24), வெங்கடேஷ் (எ) விக்கி (22), விக்னேஷ் (23) சென்னை ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். இவர்களில் கேசவன், ராஜா ஆகியோர் எம்ஜிஆர் காவல் நிலைய வரலாற்றுப் பதிவேடு ரவுடிகள் பட்டியலில் உள்ளனர். அவர்களிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட கேசவன் (எ) கேடி கேசவன் மீது 3 வழக்குகளும், ராஜா மீது 2 வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட 5 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.