சென்னையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் அலுவலகத்தில் இன்று தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் 14 அன்று இந்தியா முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தீவிபத்து மற்றும் மீட்பு பணிகளில் தைரியமாக செயல்பட்டு வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 1944 ஆண்டு ஏப்ரல் 14ம் தேதியன்று மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த “SS PORT STIKINS” என்ற கப்பல் தீ விபத்திற்குள்ளானது. இந்தக் கப்பலில் தோராயமாக 1,200 டன் வெடிப்பொருட்கள் மற்றும் எண்ணெய் வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக மும்பை தீயணைப்பு துறை வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கப்பலில் உள்ள வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியதில் மும்பை தீயணைப்பு துறை சார்ந்த 66 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்கள் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசால் ஏப்ரல் 14 அன்று தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலகத்தில் தீயணைப்புத்துறை இயக்குநர் ஆபாஷ்குமார் உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக வைக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனையடுத்து தீயணைப்புத்துறை அதிகாரிகள், வீரர்களும் அஞ்சலி செலுத்தினர்.