சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் போலி பாஸ்போர்ட் வழக்கில் முக்கிய ஏஜெண்ட்டை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 105 பாஸ்போர்ட்டுகள், போலி ஆவணங்கள், இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை பன்னாட்டு விமான நிலைய குடியுரிமை அதிகாரி சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவில் ஒரு புகார் மனு அளித்தார். இந்தியாவைச் சேர்ந்த அந்தோணிசாமி என்பவர் போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச் சீட்டு பெற்று மலேசியா நாட்டிற்கு செல்வதற்காக முயற்சி செய்ததாகவும் அந்த புகாரில் அவர் கூறியிருந்தார். போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி மேற்பார்வையில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு, போலி பாஸ்போர்ட், சீட்டு மோசடி மற்றும் கந்துவட்டி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதனையடுத்து இந்த புகார் தொடர்பாக அந்தோணிசாமி என்பவரை 07.07.2023ம் தேதியன்று போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்த நெட்ஒர்க்கின் பின்னணியில் இருக்கும் குற்றவாளிகளை துணைக்கமிஷனர் நாகஜோதி ஆலோசனையின் பேரில் உதவிக்கமிஷனர் சரஸ்வதி, சப் இன்ஸ்பெக்டர் எமர்சன் வித்தாலிஸ் துலைமையிலான காவல் குழுவினர் இவ்வழக்கில் போலி பாஸ்போர்ட் தயார் செய்யும் ஏஜெண்டுகளை பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
அதனையடுத்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராமநாதபுரம், ஆனந்தூரைச் சேர்ந்த முகமது புரோஷ்கான் (45) என்பவரை நேற்று முன்தினம் 03.08.2023 அன்று கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் போலி ஆவணங்கள் மற்றும் போலி பாஸ்போர்ட்டுகள் தயார் செய்து அதன் மூலம் மலேசியா மற்றும் வெளிநாடுகளுக்கு தகுதியில்லாத நபர்களை பணம் பெற்று கொண்டு அனுப்பி வைத்ததும் அவருக்கு உடந்தையாக புதுக்கோட்டை, ஆலங்குடியைச் சேர்ந்த மற்றொரு போலி பாஸ்போர்ட் ஏஜென்ட் சையது அபுதாஹிர் என்பவர் தலைமறைவானதும் தெரியவந்தது. அதன்பேரில், எதிரி புரோஷ்கான் மற்றும் தலைமறைவு எதிரி சையது அபதாஹிர் வீட்டிலிருந்து மொத்தம் சுமார் 105 பாஸ்போர்ட்கள் மற்றும் போலி ஆவணங்கள், இந்திய அரசு மற்றும் வெளிநாட்டு ஆவணங்களில் பயன்படுத்துவதைப் போன்று போலியான அரசாங்க மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் முத்திரைகள், அதை தயாரிக்கும் உபகரணங்கள், Computer, Printer, Cash Counting Machine, Cash Rs.57,000/-, Singapore Dolar-1000, Thai Baht-15500, Malaysian Ringgit – 25 ஆகிய வழக்கு சொத்துகளை கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட செய்யப்பட்ட எதிரி புரோஷ்கான் விசாரணைக்குப் பின்னர் நேற்று (04.08.2023) நீதிமனற்த்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி போலி பாஸ்போர்ட் வழக்கில் இராமநாதபுரத்தை சேர்ந்த ஏஜெண்டை கைது செய்து வழக்கு சொத்தினை கைப்பற்றிய மத்திய குற்றப்பிரிவு, போலி பாஸ்போர்ட், சீட்டு, மற்றும் கந்துவட்டி புலனாய்வு பிரிவு காவல் குழுவினரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினர்.
ஏஜெண்டுகள் மூலமாக பாஸ்போர்ட் மற்றும் விசா பெற விண்ணப்பிக்கும் பொதுமக்கள் இது தொடர்பாக உஷாராக இருக்குமாறும், மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக முறையான ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் மற்றும் சம்பந்தபட்ட நாடுகளின் தூதரகங்களை அணுகி விசாக்களை பெறுமாறும் சென்னை பெருநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.