எல்ஜி பெருங்காயம் போலி முத்திரையை பயன்படுத்தி விற்ற இருவரை தமிழக அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
போலி முத்திரையைப் பயன்படுத்தி எல்ஜி பெருங்காயம் விற்பனை நடைபெறுவதாக தமிழக அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல்துறையில் எல்ஜி நிறுவனத்தின் மேலாளர் குமரவேல் புகார் அளித்தார். தமிழக அமலாக்கப்பணியக குற்றப்புலனாய்வுப்பிரிவு கூடுதல் டிஜிபி அமல்ராஜ் உத்தரவின் பேரில் ஐஜி செந்தில்குமாரி வழிகாட்டுதலின் பேரில் எஸ்பி சாம்சன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
இதில் வடசென்னை பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து பதுக்கி வைத்து போலி பெருங்காயத்தை மளிகை கடைகளுக்கு சப்ளை செய்வது தெரியவந்தது. அதனையடுத்து அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் சாமுண்டீஸ்வரி, புஷ்பா தலைமையில் தனிக்குழுவினர் சென்னை மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து சென்னை கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் கொடுங்கையூர் உட்பட மொத்தம் 6 இடங்களில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு போலி பெருங்காயத்தை பதுக்கி வைத்திருந்த சீனிவாசன் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர், வீடுகளை வாடகைக்கு எடுத்து பெருங்காயத்தை அங்கு பதுக்கி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்துள்ளனர், அவர்களிடம் இருந்து எல்ஜி பெருங்காயத்தூள் 50 கிலோ, 26 ஆயிரம் காலி டப்பா, போலியாக தயாரிக்கப்பட்ட அட்டை 16,800, ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 2,41,050ஆகும். பெருங்காயத்தை போலியாக தயாரிக்க பயன்படுத்திய இயந்திரங்கள், அச்சு, போலி முத்திரை பதித்த எல்ஜி பிளாஸ்டிக் டப்பாக்கள், அதனை பேக்கிங் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
போலி முத்திரையைப்பயன்படுத்தி விற்பனை செய்த கும்பலை கைது செய்த தனிக்குழுவினரை கூடுதல் டிஜிபி அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.