ஊர்க்காவல் படையினருக்கு விரிவுப்படுத்தப்பட்ட மருத்துவ உதவி திட்டம்: கமி­ஷன­ர் சந்தீப்ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்.

ஊர்க்காவல் படையினருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ள மருத்துவ உதவி திட்டத்தை சென்னை நகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் இன்­று 01.03.2024 துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகரில் உள்ள 104 சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் 56 போக்குவரத்து காவல் நிலையங்களில் முக்கிய பாதுகாப்பு பணிகள், ரோந்து பணிகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு பணி, இயற்கை பேரிடரின் போது காவல் துறையினருடன் இணைந்து பொதுமக்களுக்கு உதவுதல், போக்குவரத்தை ஒழுங்கு படுத்துதல் போன்ற பணிகளில் சென்னை பெருநகர காவல் துறையினருக்கு பக்கபலமாக 2,329 ஊர்க்காவல் படையினர் ஆண்கள்- 2054, பெண்கள் -275 பேர் பணியாற்றி வருகின்றனர். ஊர்க்காவல் படையினரின் பணி திறன் மற்றும் உடல் திறனை மேம்படுத்தும் பொருட்டு கடந்த 21.04.2023 அன்று நடந்த காவல்துறை மானிய கோரிக்கையின் போது முதல்வ­ர் ஸ்டா­லி­ன் காவல் மருத்துவமனையில், ஊர்க்காவல் படையினரும் சிகிச்சை பெறும் வசதி விரிவுபடுத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் இது தொடர்பாக 22.02.2024 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.இதனடிப்படையில் நேற்று காலை எழும்பூர், காவலர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை நகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்து கொண்டு சென்னை நகர காவலில் பணிபுரியும் ஊர் காவல் படையினருக்கு எழும்பூர், காவலர் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ள மருத்துவ உதவி திட்டத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும், ஊர்க்காவல் படையினர் காவல் மருத்துவமனையில் அனைத்து வகையான மருத்துவ உதவிகள் பெற்றுக் கொள்வதுடன், காவல் பல்பொருள் அங்காடியிலும், ஊர்க்காவல் படையினர் பொருட்கள் வாங்குவதற்கும் அனுமதி வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட்டு, அதற்கான அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும் என காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், சென்னை நகர தலைமையிட காவல் கூடுதல் ஆணையாளர் கபில்குமார் சரத்கர், இணை ஆணையாளர் கயல்விழி, எழும்பூர் காவல் மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி மதுபிரசாத், ஊர்க்காவல் படை கூடுதல் ஊரக தளபதி மஞ்சித்சிங், துணை ஆணையாளர்கள் மணிவண்ணன் (தலைமையிடம்), ராதாகிருஷ்ணன் (மோட்டார் வாகன பிரிவு), காவல் அதிகாரிகள், ஊர்க்காவல் படை அதிகாரிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment