எழும்பூர் ரூ. 30 லட்சம் வழிப்பறி கொள்ளையில் 7 பேர் கைது

சென்னை, எழும்பூரில் ரூ. 30 லட்சம் பணம் பறித்துச் சென்ற 7 நபர்களை போலீசார் கைது செய்து ரூ. 16 லட்சம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சென்னை, நெற்குன்றம், ஜெயராம் நகர் 1வது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சக்திவேல் (43). பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சக்திவேல், 07.10.2023 அன்று இரவு, தான் வேலை செய்யும் அலுவலகத்தின் பணம் ரூ. 30 லட்சத்தை எடுத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் பாரிமுனையில் இருந்து கோயம்பேடு நோக்கி அலுவலகம் சென்றார். அப்போது வழியில் எழும்பூர், ஈ.வெ.ரா. சாலை, புனித ஆன்ரூஸ் சர்ச் அருகில் 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 நபர்கள் சக்திவேலை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி அவர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 30 லட்சம் பணம் அடங்கிய பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

எழும்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் பொருத்தப் பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, மேற்படி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட கேளம்பாக்கத்தைச் சேர்ந்த பிரதீப்குமார் (எ) வீடு கொளுத்தி (24), பெரும்பாக்கம் விஜயபாபு (28), ஆயிரம் விளக்கைச் சேர்ந்த டேவிட் (எ) வினோத் (30), பெரம்பூர் இளங்கோ (எ) இளா (29), மகாபலிபுரம் பரத் (22), மதன் (33), கண்ணகிநகர் ராஜேஷ் (36) ஆகிய 7 நபர்களை கைது செய்தனர். விசாரணையில் எதிரிகள் பிரதீப்குமார், விஜயபாபு, டேவிட் (எ) வினோத் மற்றும் 2 நபர்கள் ஏற்கனவே கடந்த 25.09.2023 அன்று எழும்பூர், பாந்தியன் சாலை, பெட்ரோல் பங்க் அருகில் பாலகிருஷ்ணன் என்பவரிடம் ரூ. 3 லட்சம் பறித்துச் சென்றதும் தெரியவந்தது. அதன் பேரில், எதிரிகளிடமிருந்து மொத்தம் ரூ. 16,26,860 -மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி 2 வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள 5 நபர்களை பிடிக்க காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். விசாரணைக்குப்பிறகு கைது செய்யப்பட்ட 7 நபர்களும் இன்று (14.10.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

Comments (0)
Add Comment