சென்னையில் போதைப்பொருள் ரெய்டு: 7 பேர் சிக்கினர்: 20 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை, நுங்கம்பாக்கம், வடபழனி மற்றும் பெரம்பூர் பகுதிகளில் மெத்தம்பெட்டமைன் மற்றும் கஞ்சா வைத்திருந்த 1 பெண் உட்பட 7 நபர்களை போலீசார் கைது செய்து 32 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 20 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நுங்கம்பாக்கத்தில் 21 கிராம் மெத்தம்பெடமைன்

சென்னை, நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (04.08.2023) மதியம், M.L.M மண்டபம் அருகில் மகாலிங்கபுரம் மேம்பாலம் நுங்கம்பாக்கம் பகுதியில் சட்ட விரோதமாக போதைபொருள் வைத்திருந்த மும்பையைச் சேர்ந்த கணேஷ், 37, கோயம்பேட்டைச் சேர்ந்த திருமலை, 34, திருவொற்றியூரைச் சேர்ந்த பிரிதிவிராஜ், 25, மேட்டுக்குளம் மாலதி, 25 ஆகியோரை கைது செய்து நேற்று (04.08.2023) நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

அவர்களிடமிருந்து 21 கிராம் மெத்தம்பெட்டமைன், 4 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவான குற்றவாளி கேகே நகர், தேவராஜ், 42 என்பவரை இன்று (05.08.2023) கைது செய்தனர். அவரிடமிருந்து 11 கிராம் மெத்தம்பெட்டமைன், 3 செல்போன்கள் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பரங்கிமலையில் 10 கிலோ கஞ்சா

பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (04.08.2023) வடபழனி பேருந்து நிறுத்தம் கண்காணித்தனர். அப்போது அங்கு நின்றிருந்தவரின் பையை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்ததும், கஞ்சாவை மேற்கு வங்காளத்தில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது. அதன் பேரில் அதனை வைத்திருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நௌசாத் எஸ்கே, 36, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட நௌசத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரம்பூரில் 10 கிலோ கஞ்சா

அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW / Annanagar) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (04.08.2023) பெரம்பூர், முரசொலிமாறன் பூங்கா அருகில் 10 கிலோ கஞ்சாவுடன் திருவாரூரைச் சேர்ந்த பிரபுதேவா, (27), என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தேவராஜ் மற்றும் பிரபுதேவா ஆகிய இருவரும் இன்று (05.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட் உள்ளனர்.

Comments (0)
Add Comment