23 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொள்ளையனை திறமையாக கைது செய்த சென்னை, பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமைக்காவலரை தமிழ்நாடு டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.
ஆவடி காவல் ஆணையரக எல்லை, பூந்தமல்லி காவல் நிலையத்தில் நீதிமன்ற விசாரணையின் போது டேவிட் பினு என்ற கொள்ளையன் தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டார். கடந்த 23 ஆண்டுகளாக தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் அவரை விரைவில் கைது செய்யும்படி ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். அதன்பேரில் பூந்தமல்லி குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் தினகரன், தலைமைக்காவலர் சுரேஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் டேவிட்பினு தனது பெயரை சசி (எ) காநாடு சசி என்று மாற்றி திருட்டு வழக்கில் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கொட்டாரக்கரா சிறையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து தனிப்படை போலீசார் கேரளா விரைந்து சென்றனர். காநாடு சசியின் அங்க அடையாளங்கள், கைரேகை ஆகியவற்றை சேகரித்தனர். அவற்றைக் கொண்டு தங்கள் வசம் உள்ள கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் அந்த நபர் டேவிட்பினு என்பது உறுதியானது. அதனையடுத்து பூந்தமல்லி மாவட்ட அமர்வு மற்றும் கூடுதல் நீதிமன்ற நீதிபதியிடம் ஆவணங்களை சமர்ப்பித்து பிடியாணை பெற்றனர். கேரள மாநிலம் கொட்டாரக்கரா சிறைக்கு சென்று பிடியாணையை நிறைவேற்றி 20.09.2003 ம் தேதி அன்று பூந்தமல்லி மாவட்ட அமர்வு மற்றும் கூடுதல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் முன்பாக ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தனிப்படைகளின் தொடர் முயற்சியால் எதிரி டேவிட்பினு கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தனிப்படையினரை டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.