பள்ளி மாணவியை மாடு முட்டிய சம்பவம்: மாடுகளின் உரிமையாளர்கள் கைது

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த 9 வயது பள்ளி மாணவியை மாடுகள் முட்டி காயப்படுத்திய வழக்கில் மாடுகளின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, சூளைமேடு, காந்தி நகர் பகுதியில் வசித்து வரும் அஷ்ரின் பானு, 28, இவரது 9 வயது மகள் மற்றும் 5 வயது மகனை நேற்று (09.08.2023) மதியம் சுமார் 03.30 மணியளவில் பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றார். வீட்டிற்கு செல்லும் வழியில், M.M.D.A. காலனி, R பிளாக், மாநகராட்சி பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே அவிழ்த்து விடப்பட்ட நிலையில் நடந்து சென்ற 2 பசுமாடுகள், மேற்படி 9 வயது சிறுமியை முட்டி தள்ளி காயப்படுத்தியது. அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் மாடுகளை விரட்டியடித்து, இரத்தக்காயமடைந்த சிறுமியை மீட்டு தாயாருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்படி சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி சம்பவத்தில் மாடுகளை பாதுகாப்பான முறையில் கட்டி வைக்காமல், சாலையில் அவிழ்த்து விடப்பட்டு, திரிய விட்டு, சிறுமியை முட்டி காயப்படுத்திய மாடுகளின் உரிமையாளர் அரும்பாக்கம், எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்த விக்கி, 26 என்பவரை கைது செய்தனர்.

Comments (0)
Add Comment