சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் சென்னையில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று, மீட்பு பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜாம் புயல் உருவாகி 03.12.2023 இரவு முதல், சென்னை பெருநகரில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை பெருநகரில் உள்ள அநேக இடங்களில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே, புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்பு குழுக்கள் மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் என சுமார் 18,000 காவல் அலுவலர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 4.12.2023 இன்று சென்னையில், எழும்பூர், பழைய கமிஷ்னர் அலுவலக சாலை, உடுப்பி சிக்னல், ருக்மணி லஷ்மிபதி சாலை, கண் மருத்துவமனை மற்றும் அண்ணாசாலை, வாலாஜா சாலை சந்திப்பு ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் திருவல்லிக்கேணி, பாரதி சாலை சென்று, அங்கு மீட்பு படகில் சென்று பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்து பொதுமக்களுக்கு, உணவு பொருட்கள் மற்றும் குடிநீர் வழங்கினார். மேலும், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு, காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். போர்க்கால அடிப்படையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும், சென்னை பெருநகர காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டி, தொடர்ந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு காவல் குழுவினருக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின்போது, கூடுதல் காவல் ஆணையாளர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, ஆர். சுதாகர் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.