கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு: வயது முதிர்ந்தவரின் வீட்டுக்கு சென்று குறைகளை கேட்ட கோயம்பேடு துணை ஆணையர்

சென்னை நகரில் கமிஷன் சந்தீப்ராய் ரத்தோரின் உத்தரவின் பேரில் கோயம்பேடு துணை ஆணையர் 80 வயது மூத்த குடிமகனின் வீட்டிற்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார்.

காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை நகரில் வசிக்கும் மூத்த குடிமக்களின் குறைகளை, சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று விசாரணை செய்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். சென்னை சாலிகிராமம், காந்திநகரைச் சேர்ந்த ஏ.கே. மணி (வயது 80) என்பவர் நேற்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோரிடம் ஒரு புகார் அளித்தார்.

கடந்த 2009ம் ஆண்டு போரூரில் 40 சென்ட் நிலத்தை ரூ. 2 கோடிக்கு வாங்குவதற்காக ஏகே மணி, கோபாலகிருஷ்ணன் (வயது 83) என்பவருடன் ஒரு ஒப்பந்தம் செய்து முன் பணமாக ரூ. 25,00,000- கொடுத்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஏகே மணி அந்த நிலம், 2004ல், ஏற்கனவே ஒருவருக்கு விற்கப்பட்டதை கண்டுபிடித்துள்ளார். இது குறித்து ஏ.கே.மணி கோபாலகிருஷ்ணனிடம், நிலம் குறித்து கேட்டபோது, வாங்கிய முன்பணத்திற்கு வட்டியுடன் திருப்பி தருவதாக, கூறினார். ஆனால் பேசிய படி கோபாலகிருஷ்ணன் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். அது தொடர்பாக ஏகே மணி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரை சந்தித்து புகார் மனு அளித்தார்.

அந்த புகார் மனு மீது விசாரணையை முதியவரான ஏகே மணியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி குறையை தீர்த்து நீதி கிடைக்க செய்யும்படி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கோயம்பேடு காவல் துணை ஆணையாளர் உமையாளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கோயம்பேடு துணை ஆணையாளர் உமையாள் தலைமையில் காவல் குழுவினர் முதியவர் மணி வீட்டிற்கு நேரில் சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் ஆவடி, காவல் ஆணையரகம், SRMC காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும், மேலும் புகார் தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. வழக்கு சிவில் சம்பந்தப்பட்டது என்பதால், முதியவர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை சட்டப்படி அணுகி நிவாரணம் பெற அறிவுறுத்தப்பட்டார். அதன்பேரில் முதியவர் ஏ.கே.மணி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் உமையாள் முதியவர் மணியின் வீட்டிற்குச் நேரில் சென்று விசாரணை செய்து குறைகளை கேட்டறிந்த சென்னை பெருநகர காவல் துறையினரின் அணுகுமுறையை முதியவர் திரு.ஏ.கே.மணி மற்றும் அவரது மனைவி ஆகியோர் மனதார பாராட்டி நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Comments (0)
Add Comment