82 வயது மூதாட்டியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த உத்தரவிட்ட கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டு, அம்மனுக்கள் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். இதில் நேரடியாக வரும் மூத்த குடிமகன்களின் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையாளர் மூத்த குடிமகன்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று (07.02.2024) காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், பொதுமக்களின் 20 புகார் மனுக்களை பெற்று, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், 41 காவல் ஆளிநர்களின் துறை ரீதியான மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஜனவரி-2024 மாதம், காவல் ஆணையரகத்தில் புதன்கிழமைகளில் நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாம்களில் கலந்து கொண்ட கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்து கொண்டு பொதுமக்களின் 27 மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் மூத்த குடிமகன்களின் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில், காவல் அதிகாரிகள் மூத்த குடிமகன்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அயனாவரத்தைச் சேர்ந்த 82 வயதான பெண் கிளாடிஸ் சிங் என்ற பெண்மணி கடந்த 03.01.2024 அன்று காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் தனது கணவரின் சொத்தை தனது மகள் பெலிஸ்டா என்பவர் அபகரித்து விட்டு, தன்னை சரிவர கவனிக்காமல், தகாத வார்த்தைகள் பேசி, கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தார். இந்த மனு மீது விரைந்து விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் 82வயதான கிளாடிஸ் சிங் மனு மீது அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினர் விசாரணை நடத்தினர். மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதில், சொத்து சம்மந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. எனவே காவல்குழுவினர் கிளாடிஸ் சிங் மகளான பெலிஸ்டா என்பவரை எச்சரித்து, தாயாருடன் தகராறு செய்யாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டார். மேலும் மேற்படி சொத்து சம்மந்தப்பட்ட தகராறு நீதிமன்றத்தில் இருப்பதால் நீதிமன்றம் மூலம் தீர்த்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. மற்றொரு மூத்த குடிமகன் புகார் மீது சம்பந்தப்பட்ட துணை ஆணையாளர் தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

மூத்த குடிமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், துணை ஆணையாளர் தலைமையிலான காவல் அதிகாரிகள் மூத்த குடிமக்கள் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், அவசர உதவி தேவையெனில் எப்பொழுதும் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்து, அவர்களுக்கு காவல் அதிகாரிகள் மற்றும் உதவி மைய எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment