கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வேளச்சேரி பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஆய்வு

சென்னை நகரில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் 2வது நாளாக வேளச்சேரி பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை படகில் சென்று பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜாம் புயல் உருவாகி, கடந்த 3ம் தேதி இரவு முதல் 4ம் தேதி இரவு வரை சென்னை பெருநகரில் அதிகன மழை பெய்தது. இதனால் சென்னை நகரம் முழுவதும் வரலாறு காணாத

வெள்ளக்காடானது. சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் என சுமார் 18,400 காவல் அலுவலர்கள்,

சென்னை பெருநகரில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொண்டும், சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றியும் வருகின்றனர். இந்நிலையில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று முன்தினம் எழும்பூர் நரியங்காடு குடியிருப்புக்கு சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்து நிவாரணங்கள் வழங்கி வருகிறார்.

அதனைத் தொடர்ந்து நேற்று 2வது நாளாக வெள்ளம் அதிகம் சூழ்ந்த பகுதியான சென்னை வேளச்சேரி டான்சிநகர் பகுதிக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளைப் பார்வையிட்டார். டிரோன் கேமரா பயன்படுத்தி மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை கண்காணித்து மீட்கப்படுவது குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர், மீட்புப் படகில் பயணம் செய்து அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களை வழங்கினார். மேலும், பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை செய்யுமாறு, காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின் போது சென்னை நகர தெற்கு கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணைக்கமிஷனர் சிபிசக்ரவர்த்தி, அடையாறு, துணைக்கமிஷனர் பொன்கார்த்திக் குமார் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Comments (0)
Add Comment