சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 724 குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர காவல்துறையினரின் பணி சிறக்க அவர்தம் குறைகளை போக்கி, காவலர் குடும்ப நலனுக்கு அதிகாரிகள் உதவிடும் வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண் உத்தரவின்பேரில் 21.01.2025 அன்று காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக 10 நாட்களுக்கு முன்பு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
அதன்பேரில், இன்று (21.01.2025) வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற “காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில்” சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் சென்னை பெருநகர காவல், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து மொத்தம் 724 குறைதீர் மனுக்களை பெற்றார். இதில் 21 காவல் ஆய்வாளர்கள், 56 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 647 காவல் ஆளிநர்கள் அடங்குவர்.
இம்முகாமில் பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட மனுக்களை பெற்று, இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், இன்று பிறந்தநாள் காணும் காவல் இணை ஆணையாளர் (தெற்கு மண்டலம்) சிபிசக்ரவர்த்தி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் முன்னிலையில், ஆணையர் அருண் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இம்முகாமில், சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) கபில்குமார் சி சரட்கர், காவல் இணை ஆணையாளர்கள் மகேஷ் குமார், பண்டி கங்காதர், (தெற்கு/போக்குவரத்து காவல்), காவல் துணை ஆணையாளர் (நிர்வாகம்) அதிவீரபாண்டியன், காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
*****