‘நாம் தரும் முன்னுரிமைதான் நமது நேரத்தை நிர்ணயிக்கிறது’ புத்தக வெளியீட்டு விழாவில் கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சு

‘‘priority என்னும் முன்னுரிமைதான் நமது நேரத்தை நிர்ணயிக்கிறது. அதனை முடிவு செய்தால் நேரம் தாமாக வந்து சேரும்’’ என்று புத்தக வெளியீட்டு விழாவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசினார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ மற்றும் அவரது மனைவி ஷ்வேதா சுப்பையா பாலகிருஷ்ணன் மகன் அத்ருத் சுப்பையா இணைந்து எழுதிய ‘‘FASCINATING FLAGS FOR FUN’’ என்ற நூல்களின் வெளியீட்டு விழா கோவையில் நடந்தது.

புத்தக வெளியீட்டு விழாவில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது

‘‘இந்தப் புத்தக வெளியீட்டு விழாவுக்காக கன்னியாகுமரியில் இருந்து கோவைக்கு வந்து வாழ்த்திய எனது பெற்றோருக்கு நன்றி. மேலும் இந்தப் புத்தகம் உருவாவதற்கு காரணமாக இருந்த எனது மனைவியின் தாயார் சாந்தி சுப்பையா மற்றும் ரவிராஜ் கலைக்கல்லூரி மாணவர்கள், விஜயா பதிப்பகத்துக்கும் நன்றி. என் பள்ளித் தோழர்கள் கண்ணன், ஸ்வாதி இந்த விழாவுக்கு வந்துள்ளனர். நான் 5ம் வகுப்பு படித்தபோது தமிழ் வாத்தியார் இன்று உங்களுக்கு கிளாஸ் கிடையாது. ஆளுக்கு ஒரு கவிதை எழுதுங்கள் என்று சொன்னார். அப்போதுதான் நான் எழுத முயற்சி செய்தேன். ஏதோ கவிதை மாதிரி வந்தது. அதன் பிறகு 9ம் வகுப்பு படிக்கும் போது எங்கள் ஊரில் கண்ணதாசன் கலைச்சங்கம், கவிதைப் போட்டி நடத்தினார்கள். அப்போது என் பள்ளித்தோழன் கண்ணன் எங்கள் பள்ளியின் கவிஞர். நானும் அவனும் அதில் பங்கு பெற்றேம். கண்ணன் முதல் பரிசும், நான் 3வது பரிசும் பெற்றோம். தற்போது கண்ணன் சினிமாவுக்கு பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாக புத்தகம் எழுதுவது என்பது என்னைப் பொருத்த வரையில் காவல்துறையில் இருந்தாலும், அடிப்படை ஆர்வம் என்பது ஆரம்பத்தில் இருந்தே இருந்ததினால்தான் எழுத முடிந்தது. நேரம் என்பது எல்லாருக்கும் 24 மணி நேரம் தான். எதை முதலில் செய்ய வேண்டும் என்பதுதான். அதற்காக எதை முதலில் செய்ய வேண்டும் என்பதுதான். நமது priority என்னும் முன்னுரிமைதான் நமது நேரத்தை நிர்ணயிக்கிறது. அதனை முடிவு செய்தால் நேரம் தாமாக வந்து சேரும். என்னுடைய கவிதைகள் 2 சூழல்களில் எழுதியிருப்பேன்.

நான் பொதுவாக எதையாவது பார்த்து அதிர்ச்சியடைந்தால் அதை எழுத தோணும். அதே போல காலையில ஓடி விட்டு வந்து வியர்வையுடன் அமர்ந்திருக்கும் போது தோன்றுவது கிரியேட்டிவ்வாக தோன்றும். அப்போது எழுதுவது மனசுக்கு திருப்தி தருவதாக இருக்கும். நான் எழுதிய கவிதைகளின் மொத்த தொகுப்புதான் இந்தப் புத்தகம். எனது புத்தகத்தை வெளியிடுவதற்கு உந்துதலாக இருந்தவர் கலெக்டர் சமீரன். நான் எனது புத்தகத்தை வெளியிட தயாரானதும், என் மனைவி கடந்த 10 ஆண்டுகளாக எழுதிய புத்தகப் பணிகளை பத்தே நாளில் ராக்கெட் ஸ்பீடில் முடித்து அவரது புத்தகத்தையும் தயார் செய்து விட்டார். அவரும், என் மகன் அத்ருத்தும் சேர்ந்து எழுதி வெளியிடப்பட்டுள்ள ‘FASCINATING FLAGS FOR FUN’ புத்தகத்தில் 50 சதவீதம் தகவல்கள் மற்றும் மீதி 50 சதவீதம் குழந்தைகள் தொடர்பான பயனுள்ள விஷயங்கள் அடங்கியிருக்கும்’ இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.

இவ்விழாவில் அறிமுக உரையை சிந்தனைக் கவிஞரும், ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநருமான கோவை கவிதாசன், சென்னை, ஸீரோ டிகிரி பப்ளிகேஷன்ஸ் ராம்ஜி நரசிம்மன் ஆகியோர் வழங்கினர். மேலும் கமிஷனர் பாலகிருஷ்ணனின் பெற்றோர் வேலய்யா மற்றும் திருமதி தங்கதனபதி வேலையா ஆகியோர் விழாவில் வாழ்த்துரை வழங்கினர்.

கமிஷனர் பாலகிருஷ்ணன் ஏற்புரை வழங்கினார். விஜயா பதிப்பகத்தின் இயக்குநர் வேலாயுதம் நன்றியுரை வழங்க நிகழ்ச்சிகளை கவிஞர் அன்புசிவா தொகுத்து வழங்கினார். கோவை கவிதாசன், வேலய்யா, தங்கதனபதி வேலையா, விஜயா பதிப்பக இயக்குநர் வேலாயுதம், வருமானவரித்துறை முன்னாள் அதிகாரி மோகன் அலங்காமணி, எஸ்எஸ்வி கல்வி நிறுவன இயக்குநர் ஸ்ரீஷா மோகன்தாஸ் உள்பட சென்னை மற்றும் கோவையில் இருந்து ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment