சென்னை நகரில் அமலாக்கம் மற்றும் குற்றப்புலனாய்வுப்பிரிவு போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் ரூ. 6 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதைப்பொருளுடன் கீழக்கரையைச் சேர்ந்த 8 பேர் கும்பலை கூண்டோடு கைது செய்துள்ளனர்.
அங்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார் அந்த வீட்டுக்குள் கொக்கைன் போதைப்பொருளுடன் தங்கியிருந்த ராமநாதபுரம் மவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த மகேந்திரன், காசிம், முகமது முபாரக், எட்வர்ட் சாம், முகமது இத்ரீஸ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்தனர். அவற்றை ராமநாதபுரத்தில் இருந்து கடத்திவரப் பயன்படுத்தப்பட்ட 1 கார் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஐந்து பேரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கோயம்பேடு பகுதியில் தங்கியிருந்த அவர்களது கூட்டாளிகள் காஜா முகைதீன். பாண்டி, பழனீஸ்வரன் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து மேலும் 1 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான மகேந்திரன், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் வனக்காப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். அவரது உறவினர் பாண்டி என்பவர் ராமநாதபுரம் கடற்கரையில் கழிவு பிளாஸ்டிக்குகளை சேகரிக்கும் போது 1 கிலோ கொக்கைன் கிடைத்துள்ளது, அதனை மகேந்திரனிடம் காட்டியுள்ளார். முதலில் அது என்னவென்று தெரியாமல் விழித்த அவர்கள் பின்னர் அதனை மருத்துவப் பரிசோதனை செய்ததில் அது கொக்கைன் போதைப்பொருள் என தெரியவந்துள்ளது. அதனை சென்னைக்கு கொண்டு வந்து விற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்பதால் தனது கூட்டாளிகளான காசிம், முகமது முபாரக், எட்வர்ட் சாம், முகமது இத்ரீஸ் ஆகியோர் மூலம் கொக்கைனை காரில் கடத்தி வந்து சென்னையில் விற்க முயன்றுள்ளனர். கைப்பற்றப்பட்ட 2 கிலோ கொக்கைனின் சந்தை மதிப்பு ரூ. 6 கோடி.
இந்த போதைப்பொருள் கடத்தல் சதிச்செயலில் வேறு யாரேனும் இணைந்துள்ளனரா என்பதையும் மற்றும் போதைபொருளின் மூலம் அறியவும் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ரூ. 6 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் கும்பலை கைது செய்த தனிப்படை போலீசாரை அமலாக்கம் குற்றப்புலனாய்வுப்பிரிவு கூடுதல் டிஜிபி அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.