தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் 24 டிஎஸ்பிக்கள் பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழா சென்னையை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் நடந்தது.
விழாவில், முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அவர் பேசிய தாவது–
காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டு ஓராண்டு பயிற்சி முடித்து உடல் உறுதி மன உறுதி மிக்கவர்களாக நீங்கள் களத்துக்கு போவது மிகவும் பெருமைக்குறியது. வலுவான காவல் அடிப்படை பயிற்சியில் 9 பெண்கள் உள்பட 24 காவல் அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். காவல் அதிகாரிகள் உயர்ரகமான பயிற்சிகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு சுமார் 129 ஏக்கரில் பரந்து விரிந்த இந்த பயிற்சியகத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கினார்.
இங்கு பலவகை சட்டப்பயிற்சி, குற்றங்களை களைவது தொடர்பான பயிற்சி, புலனாய்வுப் பயிற்சி, கணிணி குற்றங்கள் தொடர்பான பயிற்சி, பெண்கள் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுப்பு தொடர்பான பயிற்சி, ஆயுதப் பயிற்சி ஆகியவற்றை திறம்பட கற்று எந்த சவால்களையும் எதிர்கொள்ளும் திறனுடன் காவல் அதிகாரிகளாகிய நீங்கள் களத்துக்கு போவது பெருமை மிக்கது. இந்த உயர் பயிற்சியகம் மூலம் இதுவரை 5055 நேரடி எஸ்ஐக்கள், 297 காவல்துறை துணை கண்காணிப்பாளர்களுக்கு அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் 2452 காவலர்கள் அடிப்படை பயிற்சி முடித்து பணியில் சேர்ந்துள்ளனர். காவல் பணி என்பது மக்கள் பிரச்சினையை நேரடியாக தீர்த்து வைக்கும் மிக உன்னதமான பணி. பொதுமக்களுடன் கனிவாக பேசி, அவர்களுக்கான நியாயமான சேவையை தொடர்ந்து வழங்க வேண்டும். உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். அதில் நீங்கள் தொடர்ந்து அப்டேட் ஆகவேண்டும். அறிவியல் சார்ந்த விசாரணையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பீல்டுக்கு போகும் இந்த நேரத்தில் எப்படி பிட் ஆக இருக்கிறீர்களோ அதே உறுதியுடன் தொடர்ந்து நீங்கள் இருக்க வேண்டும்.
பணிச்சுமை மத்தியில் உங்கள் உடைமைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும், குடும்பத்துடன் செலவிட வேண்டும். காவல்துறையில் சிறப்பாக நேர்மையாக பணிபுரிந்து பல பதவி உயர்வுகளைப் பெற்று மக்கள் சேவையில் சிறந்து விளங்க வேண்டும். நான் மீண்டும் உங்களை சந்திக்கும் போது பீல்டுக்கு போகும் போது உங்கள் ஆலோசனையின் பேரில் சிறப்பாக மக்கள் பணி ஆற்றுகிறோம் என நீங்கள் ஒவ்வொருவரும் சொன்னாலே அதுவே எனக்கு மகிழ்ச்சி. தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு துணையாகவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மிகுந்த அக்கரையுடனும், நீங்கள் அனைவரும் திட்டமிட்டு செயல்படவேண்டும் என வாழ்த்தி விடைபெறுகிறேன்” இவ்வாறு முதல்வர் பேசினார்.