சென்னை, தி.நகர் நகைக்கடையில் ரூ. 6 லட்சம் தங்க, வைர நகைகளை ஆட்டையைப் போட்ட பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தி.நகர், டாக்டர் நாயர் சாலையைச் சேர்ந்தவர் சுரேஷ் ஜெயின் (36). இவர் தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகை நேரத்தில் மேற்படி தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யும் கடையில் விற்பனை பிரிவில் வேலைக்கு சேர்ந்த சென்னை எம்கேபி நகரைச் சேர்ந்த ரேவதி என்ற பெண் திடீரென்று 03.10.2024 அன்று வேலையிலிருந்து நின்றுள்ளார். கடையின் உரிமையாளர் சுரேஷ் ஜெயின் ரேவதிக்கு ஒதுக்கப்பட்ட பிரிவில் தங்கம் மற்றும் வைர நகைளை சரிபார்த்த போது, தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு பதில் போலியான நகைகள் இருப்பதும், சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் திருடுபோயிருப்பதும் தெரியவந்தது. இது குறித்து சுரேஷ் ஜெயின் சௌந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், தென்சென்னை இணைக்கமிஷனர் சிபிச்சக்கரவரத்தி மேற்பார்வையில், தேனாம்பேட்டை உதவிக்கமிஷனர் ஆரோக்கித ரவீந்திரன் தலைமையில் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை செய்தும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்தனர். இதில் கடை ஊழியர் ரேவதி போலி நகைகளை வைத்து விட்டு கடையிலிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை திருடியது தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் அதன் பேரில் ரேவதி(33)யை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 4.10 லட்சம் மதிப்பு தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட ரேவதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.