சென்னை குரோம்பேட்டை தனியார் விடுதியில் நர்சிங் மாணவியை கொலை செய்து விட்டு கேரளா தப்ப முயன்ற காதலனை 2 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்து தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை, தாம்பரம் காவல் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட குரோம்பேட்டை காவல் நிலையத்தில் CLC வொர்க்ஸ் ரோட்டில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு கல்லூரி மாணவி ஒருவர் இன்று 01.12.2023ம் 5 மணியளவில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதன்பேரில் குரோம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர். இதில் இறந்த பெண் கேரளாவைச் சேர்ந்த பக்ருதீன் என்பவரது மகள் பவுசியா (வயது 20)என்றும் தனது காதலர் ஆஷிக் என்பவருடன் விடுதியில் தங்கி இருந்ததும், காதலருடன் ஏற்பட்ட வாய் தகராறில் காதலர் பவுசியாவை கொலை செய்து தப்பி ஓடி விட்டதும் தெரியவந்தது. அதனையடுத்து கொலையாளியை கைது செய்ய தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.
தப்பியோடிய ஆஷிக்கின் செல்போன் எண் மூலம் அவர் இருக்கும் இடத்தை போலீசார் டவர் மூலம் ஆய்வு செய்தனர். இதில் அவர் பல்லாவரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. அவரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் பவுசியாவை கொலை செய்தது ஏன் என்பது குறித்து விசாரணையை துவங்கிய போது ஆஷிக் பரபரப்பு தகவல்களை போலீசாரிடம் வெளியிட்டார். குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பவுசியா பிஎஸ்சி நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஆஷிக்கும், பவுசியாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இன்று குரோம்பேட்டை தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறில் ஆஷிக் தனது டி-ஷர்ட்டை கழற்றி பவுசியாவின் கழுத்தை நெறுக்கி கொலை செய்து விட்டு, கேரளா விற்கு தப்ப முயன்றுள்ளார் போன்ற விவரங்கள் தெரியவந்தன. மேலும் இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு எதிரியை உடனடியாக கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.