காணாமல் போன 20 கிராம் தங்க வளையலை கண்டுபிடித்து பெண்ணிடம் ஒப்படைத்த அரும்பாக்கம் போலீசுக்கு பாராட்டு

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் பெண் தவறவிட்ட 20 கிராம் தங்க வளையல் கண்டுபிடித்து அவரிடம் போலீசார் ஒப்படைத்த சம்பவம் பாராட்ட வைத்துள்ளது.

சென்னை, அரும்பாக்கம், ஜானகிராமன் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சஞ்சனா (வயது 28). நேற்று (19.11.2023) காலை, சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அவரது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். வீட்டினருகே அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சத்யா ஷோரூம் அருகில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து அவர் ஆட்டோவில் பயணித்தார். அப்போது சஞ்சனா தனது கையில் அணிந்திருந்த 20 கிராம் தங்க வளையல் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து சஞ்சனா அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அரும்பாக்கம் உதவிக்கமிஷனர் ரமேஷ் மேற்பார்வையில் அரும்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அது தொடர்பாக விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தின் அருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, அரும்பாக்கம், சத்யா ஷோரூம் அருகே ஒரு நபர் சாலையில் குனிந்து, தங்க வளையலை எடுத்துச் செல்வது தெரியவந்தது. அவர் யார் என போலீசார் விசாரித்து வந்த நிலையில் அந்த நபரே வந்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் நகைகளை கொண்டு வந்து ஒப்படைத்தார்.

விசாரணையில் அந்த நபர் அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்துள்ளதும், அவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வபிரதீப் (வயது 30) என்பதும் தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் நகை காணாமல் போனதாக புகார் அளித்த சஞ்சனாவை அழைத்து, செல்வபிரதீப் ஒப்படைத்த தங்க வளையலை காண்பித்தனர். அப்போது, அது சஞ்சனாவின் தங்க வளையல் என உறுதி செய்யப்பட்டது. ஆகவே, உரிய முறையில் சாலையில் தவறவிட்டு பின்னர் கண்டெடுத்த 20 கிராம் எடை கொண்ட தங்க வளையல் அரும்பாக்கம் உதவிகக்கமிஷனர் ரமேஷ் முன்னிலையில் சஞ்சனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 20 கிராம் தங்க வளையலை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த செல்வபிரதீப் மற்றும் அது தொடர்பாக துரித விசாரணை நடத்தி நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த அரும்பாக்கம் உதவிக்கமிஷனர் ரமேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரை உயர் காவல் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.

 

Comments (0)
Add Comment