கொலை வழக்கில் 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஒடிசா ஆசாமி கைது: சென்னை ஆதம்பாக்கம் போலீசார் நடவடிக்கை

ஆதம்பாக்கம் பகுதியில் 1995ம் ஆண்டு மாமியாரை கொலை செய்தும், மனைவி மற்றும் மைத்துனரை கொலை முயற்சி செய்தும் 28 ஆண்டுகள் தலைமறைவான குற்றவாளி, சென்னை பெருநகர காவல் தனிப்படையினரால் ஒடிசாவில் கைது செய்யப்பட்டார்.

22 வயதில் ஹரிஹர பட்டா ஜோஷி

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஹர பட்டா ஜோஷி, என்பவர் கடந்த 1993ம் ஆண்டு சென்னைக்கு வந்து கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரைச்சேர்ந்த இந்திரா என்ற பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் ஹரிஹர பட்டா ஜோஷி, இந்திராவுக்கு 13.07.1994 அன்று திருமணமாகி, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், இந்திரா தனது தாய் ரமாவின் வீட்டுக்குச் சென்று விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்.

தற்போது 54 வயதில் ஹரிஹர பட்டா ஜோஷி

இந்நிலையில், ஹரிஹர பட்டா ஜோஷி கடந்த 09.08.1995 அன்று மாமியார் ரமாவின் வீட்டிற்கு சென்று மனைவி இந்திரா மற்றும் இந்திராவின் சகோதரர் கார்த்திக் ஆகியோரை கத்தியால் தாக்கவே, இருவரும் ரத்தக் காயத்துடன் தப்பியோடி விட்டனர். பின்னர் ஹரிஹர பட்டா ஜோஷி வீட்டிலிருந்த மாமியார் ரமாவை கத்தியால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார். இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து ஹரிஹர பட்டா ஜோஷியை போலீசார் தேடி வந்தனர்.

ஆதம்பாக்கம் காவல் நிலைய காவல் குழுவினர் 1996 முதல் 2006ம் ஆண்டு வரையில் பலமுறை, எதிரி ஹரிஹர பட்டா ஜோஷியின் சொந்த ஊரான, ஒடிசா மாநிலம், கஞ்சா மாவட்டத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, எதிரியை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தலைமறைவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டடது.

இந்நிலையில் கொலையாளியைப் பிடிக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் தெற்கு மண்டல இணை ஆணையாளர் சிபிச் சக்ரவர்த்தி, ஆகியோர் அறிவுரையின்பேரில், புனித தோமையர்மலை துணை ஆணையாளர் தீபக் சவாச் மேற்பார்வையில், மடிப்பாக்கம் உதவி ஆணையாளர் புருஷோத்தமன் நேரடி மேற்பார்வையில் ஆதம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் ஹரிஹர பட்டா ஜோஷி 22 வயதில் எடுத்த கருப்பு வெள்ளை நிற புகைப்படத்துடன், ஒடிசா மாநிலம் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மேலும், ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் விவேக் ஒத்துழைப்புடன், ஒடிசா மாநில காவல் துறையினரின் ஒருங்கிணைப்புடன் தனிப்படையினர் ஒடிசா மாநிலத்தில் சுமார் 2 வாரங்கள் முகாமிட்டு, பல இடங்களில் விசாரணை செய்தும், தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். கொலை வழக்கில் சுமார் 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஹரிஹர பட்டா ஜோஷி என்பவரை கைது செய்தனர். விசாரணையில் எதிரி ஹரிஹர பட்டா ஜோஷி ஒடிசா மாநிலம், பெஹ்ராம்பூரில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி ஹரிஹர பட்டா ஜோஷி, இன்று (26.12.2023) ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, உரிய சட்ட நடிவக்கைகளின்படி சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.

இந்தக் கொலை வழக்கில் சுமார் 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த எதிரியை கைது செய்ய உதவிய கஞ்சம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் விவேக் மாநில காவல் குழுவினர் மற்றும் உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான தனிப்படையினரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாகப் பாராட்டினார்.

 

Comments (0)
Add Comment